திங்கள், 22 ஜூன், 2020

இந்தியப் பகுதிகள் சீனாவால் கைப்பற்றப்பட்டது உறுதி என ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்தியப் பகுதிகள் சீனாவால் கைப்பற்றப்பட்டது உறுதி என ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

 

இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் கூறியுள்ள நிலையில் பாங்கோங் (Pangong) ஏரிக்கு அருகே இந்தியப் பகுதியை சீனா கைப்பற்றியுள்ளது என்பதை செயற்கைக்கோள் படங்கள் தெளிவாகக் காட்டுகிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றாச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 

இந்தியா - சீனா எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த 16ம் தேதி இரவு நடைபெற்ற கடும் மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்ட வீரர்கள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மீண்டும் எல்லையில் பதற்றம் நிலவி வருவதோடு இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றனர்.

 

இதனிடையே இந்த பிரச்சினை தொடர்பாக விவாதிக்க கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தார். அதில் பேசிய அவர் இந்திய எல்லைக்குள் யாரும் இல்லை எனவும் நமது பகுதிகள் எதையும் சீனா கைப்பற்றவில்லை" எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றியிருந்த ராகுல்காந்தி, பிரதமரின் கருத்தை மேற்கோள் காட்டி ட்விட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

 

அதில் பிரதமர் மோடி இந்திய பகுதிகளை சீன ஆக்கிரமிப்புக்கு ஒப்படைத்துவிட்டார் எனவும் நிலம் சீனாவின் பகுதி என்றால், அங்கு நமது வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? அவர்கள் எந்த பகுதியில் கொல்லப்பட்டனர்?" எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.


பிரதமர் மோடியின் பேச்சு தவறாகத் திசை திருப்பப்படுவதாகப் பிரதமர் அலுவலகம் விளக்கமளித்திருந்தது. இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டரில் நேற்று பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, இந்தியா - சீனா இடையேயான பதற்றம் குறித்து வெள்ளிக்கிழமை நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின் போது, யாரும் நாட்டிற்குள் நுழையவில்லை நமது நிலப்பரப்பை யாரும் கைப்பற்றவில்லை என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனால் செயற்கைக்கோள் படங்கள் பாங்கோங் ஏரிக்கு அருகே இந்தியப் பகுதியை சீனா கைப்பற்றியுள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது" என பதிவிட்டுள்ளார்.