திங்கள், 29 ஜூன், 2020

ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் இருந்த காயங்கள்; சிறைத்துறை ஆவணம் மூலம் அம்பலம்

சாத்தான்குளத்தில் தந்தை மகன் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் இருவரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு காயங்கள் இருந்தது சிறைத்துறை ஆவணம் மூலம் அம்பலமாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஜூன் 19ம் தேதி ஊரடங்கு நேரக் கட்டுப்பாட்டை மீறி கடை திறந்ததாக இருவரையும் சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், நீதிமன்றக் காவலில் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் ஜூன் 22-ம் தேதி தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் மர்மமான முறையில் இறந்ததாக தெரிவித்தார்.

சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதாகவும் அதனால் அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை மகன் இறந்த சம்பவம் தமிழகம் முழுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் தொடர்புள்ள அனைத்து காவலர்களும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அனைவரின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, மநீம தலைவர் ஸ்டாலின், ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு போன் மூலம் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி சாத்தான்குளம் தந்தை – மகன் மரண வழக்கில் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் தெரிவிக்கும் என்று கூறினார்.

இந்த நிலையில், சாத்தான்குளத்தில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறைக்கு அழைத்து வருமுன் இருவரின் உடல்களிலும் காயங்கள் இருந்தது சிறைத்துறை ஆவணம் மூலம் அம்பலமாகியுள்ளது. இதன் மூலம், ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் போலீசார் அடித்து சித்திரவதை செய்ததற்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக சாத்தான்குளம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.