காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ கே ஆண்டனி மனோஜ் சி ஜி உடன் லடாக்கின் நிலைமை மற்றும் அதன் போக்கு குறித்து பேசினார்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக லடாக்கின் நிலைமை குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் இன்னும் இருக்கிறது. அவற்றின் கட்டுமானங்கள் உள்ளன. அவர்கள் மேலும் எதையும் செய்யவில்லை என்றாலும், அவற்றின் கட்டுமானங்கள் இன்னும் உள்ளன. அவை இன்னும் அகற்றப்படவில்லை. பாங்காங் டிஎஸ்ஒ ஏரிப் பகுதியிலும் சீன ராணுவம் உள்ளது, ஒவ்வொரு நாளும் அவர்கள் பலப்படுத்துகிறார்கள். மேலும், அவர்கள் ஹாட் ஸ்பிரிங்கிலும் இருக்கிறார்கள். கல்வான் பள்ளத்தாக்கு ஒருபோதும் சர்ச்சைக்குரியதாக இருந்ததில்லை. பல ஆண்டுகளாக, இந்திய ராணுவமும் சீன ராணுவமும் ஒரு டஜன் சர்ச்சைக்குரிய பகுதிகளை அடையாளம் கண்டுள்ளன. ஆனால், கல்வான் பள்ளத்தாக்கு ஒருபோதும் சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்கவில்லை. அது இந்திய பிரதேசம். நம்முடைய இறையாண்மை மறுக்கமுடியாதது. யுபிஏ அரசின் இண்டாவது ஆட்சியின்போது, கல்வான் பள்ளத்தாக்குக்கான சாலையை நிர்மாணிக்க ஆரம்பித்தோம். அந்த நேரத்தில், சீன தரப்பிலிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை. திடீரென்று, அவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து இந்திய பகுதிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அது 20 தைரியமான வீரர்களின் துயர தியாகத்தில் முடிந்தது.
சீனா, சாலை அமைப்பதை எதிர்க்கவில்லை என்று நீங்கள் கூறினீர்கள். எனவே, தற்போதைய நிலைப்பாடுக்கான காரணம் பற்றி உங்கள் கருத்து என்ன?
1962 முதல், 4000 கி.மீ க்கும் அதிகமான இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல்கள் நடந்தன. அனைத்து அரசாங்கங்களின் காலத்திலும் ஊடுருவல்கள் நடந்தன. ஆனால், 1975 முதல் சீன எல்லையில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தத் தொடங்கினோம். அடுத்தடுத்த அரசாங்கங்கள் உள்கட்டமைப்பை பலப்படுத்தின. யுபிஏ அரசின் முதல் மற்றும் 2வது ஆட்சியின்போது உள்கட்டமைப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டது. யுபிஏ அரசு முதல் மற்றும் 2வது ஆட்சியில் அதிகபட்ச தொகையை பாதுகாப்புக்காக செலவிட்டன. 2006 முதல், நாங்கள் பாதுகாப்பு செலவினங்களை இரட்டிப்பாக்கினோம். நாங்கள் அதிகமான சாலைகள் மற்றும் அதிக பாலங்களைக் கட்டினோம். நூற்றுக்கணக்கான சுகோய், மிக் 29 விமானங்களை வாங்கினோம். கொல்கத்தாவில் பனகாரை மையமாகக் கொண்டு தாக்குதல் படைகளை உருவாக்க முடிவு செய்தோம். தேஸ்பூர் மற்றும் ரங்கபஹாரில் மேலும் இரண்டு மலைப் பிரிவு படைகளை எழுப்ப முடிவு செய்தோம். நாங்கள் சி-17 மற்றும் சி-130 போன்ற போக்குவரத்து விமானங்களை வாங்கினோம். இப்போது இந்திய ஆயுதப்படைகள் நன்கு பொருத்தப்பட்டிருக்கின்றன எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும்.
யுபிஏ ஆட்சி காலத்திலும் ஊடுருவல்கள் இருந்தனவா?
நான் உங்களிடம் கூறியிருக்கிறேன். எல்லைகள் தீர்க்கப்படாததால் 1962 முதல் ஊடுருவல்கள் நடந்து வருகின்றன. 2013 ஆம் ஆண்டில் டெப்சாங்கிலும், 2014 இல் சுமரிலும் யுபிஏ ஆட்சி காலகட்டத்தில் ஒரு தீவிரமான ஊடுருவல் நடந்தது. அது 2013இல் 21 நாட்கள் ஆனது… அவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்தனர்… கூடாரங்கள் மற்றும் எல்லாவற்றையும் வைத்தனர்… நேருக்கு நேர் சண்டை ஏற்பட்டது… ஆனால், 21 நாட்களுக்குப் பிறகு, ராணுவ மற்றும் இராஜதந்திர அளவிலான கலந்துரையாடல்களுக்குப் பிறகு அவர்கள் திரும்பிச் சென்றனர். நிலை மீட்டெடுக்கப்பட்டது. 2014 இல் சுமரிலும் ராணுவ மற்றும் ராஜதந்திர அளவிலான கலந்துரையாடல்களுக்குப் பிறகு அவர்கள் திரும்பிச் சென்றனர். முந்தைய நிலை மீட்டமைக்கப்பட்டது.
இந்த முறை என்ன தவறு நடந்தது?
முதலாவதாக, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவிடம் துரோகம் இருக்கும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. சீன அதிபருடனான மகாபலிபுரம் கலந்துரையாடலின் உற்சாகத்தின் கீழ் நாடு முழுவதும் இருந்தது. கல்வான் பள்ளத்தாக்கு ஒருபோதும் சர்ச்சைக்குரியதாக இருக்கவில்லை. இது சீனாவின் துரோகம். நமது இறையாண்மை பாதுகாக்கப்படுவதை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.
இந்த ரத்தக்களரியைத் தவிர்க்க அரசாங்கம் என்ன செய்திருக்க முடியும்?
இரு படைகளும் பின்வாங்குவது குறித்து விவாதித்தபோது அவர்கள் நம்மைத் தாக்கினர். அது துரோகம். இப்போது நாம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஆயுதப்படைகளை பலப்படுத்துங்கள். இறுதி நோக்கம் நிலையை மீட்டெடுக்க வேண்டும்.
யுபிஏ ஆட்சிக் காலத்தில் 43,000கிமீ இந்தியப் பகுதி சீனர்களிடம் சென்றது என்றும் 2010 மற்றும் 2013 ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 600 ஊடுருவல்கள் நடந்ததாகவும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளாரே?
இது முற்றிலும் தவறானது. 1962 முதல் ஊடுருவல்கள் இருந்தன. 1962க்கு முன்பே, ஊடுருவல்கள் இருந்தன. ஆனால், இந்த வகையான பெரிய ஊடுருவல் நம் காலத்தில் நடக்கவில்லை. டெப்சாங் மற்றும் சுமரில் நிலை மீட்டெடுக்கப்பட்டது.
சீனாவை எவ்வாறு சமாளிப்பது?
இன்றைய இந்தியா 1962இல் இருந்த இந்தியா அல்ல… இப்போது எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆயுதப்படைகள் நன்கு தயாராக உள்ளன. யுபிஏ 2வது ஆட்சியில் சீன முன்னுரிமையில் சில மாற்றங்களைக் கண்டேன். அதனால்தான் டெப்சாங் மற்றும் சுமரில்… அவர்கள் நம்முடைய எல்லைக்குள் வந்தார்கள். வற்புறுத்தலுக்குப் பிறகு அவர்கள் திரும்பிச் சென்றார்கள். அந்த நேரத்தில், அவர்களின் முன்னுரிமை தென்சீனக் கடலில் குழப்பமாக இருந்தது. அதை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவர்கள் முயன்றனர். அவர்கள் தைவான், ஹாங்காங், சின்ஜியாங் பற்றி அதிக அக்கறை கொண்டிருந்தனர். ஆனால், மீண்டும், திடீரென்று அவர்கள் தங்கள் முன்னுரிமையை மாற்றியுள்ளனர். அந்த வகையில் இது முன்மாதிரி இல்லாதது… சர்ச்சைக்குரியதாக இல்லாத ஒரு பிரதேசத்தின் மீட்தான தாக்குதல் இது. சர்ச்சை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் தங்கள் உண்மையான நிலைக்குத் திரும்பிச் சென்றுள்ளார்கள்… அமைதியான தீர்வு காணத் தயாராக இருந்தார்கள்… ஆனால் இப்போது அவர்கள் திடீரென்று தங்கள் முன்னுரிமையை மாற்றிவிட்டார்கள். நாம் மதிப்பீடு செய்ய வேண்டிய ஆழமான ஒன்று உள்ளது. இதை அரசாங்கம் ஆழமாக ஆராய வேண்டும்.
காங்கிரஸ் கட்சி நரேந்திர மோடிக்கு எதிராக இருக்கிறது சீனாவுக்கு எதிராக இல்லை என்று பாஜக கூறுகிறது… சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் எவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
முன்னதாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களுக்கு காங்கிரஸ் மட்டுமே சென்று கொண்டிருந்தது. மோடி அரசு வந்த பிறகு, அவர்களும் (பாஜக) தங்கள் பிரதிநிதிகளை அனுப்பத் தொடங்கினர். பாஜக மற்றும் காங்கிரஸ் இருவரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் நட்புடன் உள்ளன. நான்கு முறை சீனாவிற்கு அழைக்கப்பட்ட இந்தியாவின் ஒரே முதல்வர் நரேந்திர மோடி என்பதை அனைவரும் மறந்து விடுகிறார்கள். அவர் சீன அதிபரை 18 அல்லது 19 முறை சந்தித்தார். நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும்போது நாங்கள் அரசாங்கத்துடனும் ஆயுதப்படைகளுடனும் ஒன்றாக இருப்போம் என்று காங்கிரஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ஆயுதப்படைகளுக்கு ஆதரவாக எல்லாவற்றையும் செய்வோம். அதுதான் காங்கிரஸ் பாரம்பரியம்.
அரசாங்கத்திற்கு அடுத்து என்ன சொல்கிறீர்கள்?
நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது… மோதலின் முடிவில், அரசாங்கத்தால் நிலைமையை மீட்டெடுக்க முடியுமா. இந்திய பிரதேசத்தில் வெளியாட்கள் யாரும் இல்லை என்று பிரதமர் கூறினார். இது எனக்கும் முழு நாட்டிற்கும் ஒரு அதிர்ச்சியாக இருந்தது. சீன ராணுவம் இன்னும் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ளது. அவர்களின் கட்டுமானமும் உள்ளது. அவர்கள் ஹாட் ஸ்பிரிங்கில் உள்ளனர்… அவர்கள் விரல் 4 வரை உள்ளனர். ஒவ்வொரு நாளும் அவர்க்ள் பலப்படுத்துகின்றனர். இப்போதுகூட ராணுவ அளவிலான பேச்சுவார்த்தைகள் கல்வான் பள்ளத்தாக்கில் மட்டுமே உள்ளன. பாங்காங் டிஎஸ்ஒ பற்றி அவர்கள் எதுவும் சொல்லவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் சீனர்கள் வெளியேற வேண்டும் என்று இந்திய ராணுவம் அவர்களிடம் கூறியுள்ளதுடன் பிரதமர் அத்தகைய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நிலைமையை மீட்டெடுக்க அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும் என்ற திட்டவட்டமான பொது அறிக்கையை வெளியிடுவது பிரதமரின் கடமையாகும். அதை அவர் பகிரங்கமாகவும் திட்டவட்டமாகவும் சொல்லட்டும்.