செவ்வாய், 30 ஜூன், 2020

மாஜிஸ்திரேட்டிடம் ஒருமையில் பேசிய விவகாரம்: 3 பேர் மீது நடவடிக்கை

Image

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக விசாரணை செய்த மாஜிஸ்திரேட்டிடம் ஒருமையில் பேசிய விவகாரம் தொடர்பாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரியின் மர்ம மரணம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையானது கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை விசாரணை நடத்த உத்தரவிட்டது. நேற்று முன்தினம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மதியம் 12 மணிக்கு தொடங்கிய விசாரணையானது நேற்று அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து 16 மணி நேரம் நடந்தது.  

விசாரணையின் போது தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் தனக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை ஒருமையில் பேசியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில்  மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். காவலர் மகாராஜனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.