sathankulam jeyaraj fennix case : நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் மரண வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. . இதையடுத்து, அவரிடம் போலீசார் கடையை அடைக்கச் சொல்லி கடுமையாகப் பேசியிருக்கிறார்கள். இதற்கு ஜெயராஜ் எதிர்ப்பு தெரிவித்துப் பேசவே, போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
போலீஸ் நிலையத்தில் இருவரையும் போலீசார் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்துவிட்டனர். போலீசார் கடுமையாகத் தாக்கியதில் தந்தையும், மகனும் இறந்ததாகக் கூறி, அவர்களது உறவினர்கள், வியாபாரிகள் மற்றும் சாத்தான்குளம் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மற்ற போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று சி.பி.ஐ.-க்கு மாற்றப்படும் என நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையை தமிழக உள்துறை வெளியிட்டுள்ளது.