ஞாயிறு, 28 ஜூன், 2020

மகாத்மா காந்தி கூறியதை மறந்து விட்டீர்களா” சீனப் பொருட்களுக்கு எதிராக குரல் கொடுத்த கங்கனா ரணாவத்!

சீனப் பொருட்களை புறக்கணிக்க இந்திய மக்கள் முன்வர வேண்டும் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் வலியுறுத்தியுள்ளார். 

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த மோதலை தொடர்ந்து சீனாவின் நடவடிக்கைக்கு எதிராக இந்திய மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சீன தயாரிப்புகளை புறக்கணிப்போம் என்ற கருத்து வலுத்து வருகிறது. பாலிவுட் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சீன பொருட்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் என அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராணுவ வீரர்கள் மற்றும் அரசாங்கத்திகு இந்திய மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியர்கள் அனைவரும் சீனப் பொருட்களை புறக்கணித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இந்திய நிலத்தின் ஒரு பகுதியை மற்றவர்கள் எடுத்துக் கொள்வது, உடலில் ஒரு பகுதியை கிழித்தெறிவதற்கு சமமானது என கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், ‘லடாக்கின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் சீனாவிடம் இருந்து காப்பாற்றும் போது நமது வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மகாத்மா காந்தி அந்நாட்டு பொருட்களை புறக்கணிக்க சொன்னதை நீங்கள் மறந்து விட்டீர்களா? லடாக் நமது நாட்டின் முக்கியமான பகுதி. அதனால் இந்த போரில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும். சீனப் பொருட்களை புறக்கணித்து அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பது நமது பொறுப்பு’ என கூறியுள்ளார்.