செவ்வாய், 30 ஜூன், 2020

விசாரணைக்குச் சென்ற நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லை: சாத்தான்குளம் 'ஷாக்

Arun Janardhanan

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த தந்தை – மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பான நீதி விசாரணைக்கு போலீசார் தகுந்த ஒத்துழைப்பு தருவதில்லை. அதற்கான ஆதாரங்களை அவர்கள் அழித்துள்ளனர் என்று நீதிவிசாரணை நடத்திய நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசனிற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் அங்கு கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர்கள் கோவில்பட்டி கிளைச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் 22ம் தேதி உயிரிழந்துவிட்டதாக கோவில்பட்டி நீதி விசாரணை நீதிபதி பாரதிதாசன், உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நீதி விசாரணை அதிகாரி பாரதிதாசனின் இந்த புகாரை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சாத்தான்குளம் காவல்நிலையத்தை, தூத்துக்குடி கலெக்டரின் கட்டுப்பாட்டில் கொண்டுவர உத்தரவிட்டார். மேலும், ஏஎஸ்பி டி.குமார், டிஎஸ்பி பிரதாபன், கான்ஸ்டபிள் மகாராஜன் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை, சிபிஐ விசாரிக்க தமிழக அரசு தொடர்ந்த கோரிக்கைக்கு அனுமதி அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பெலிக்ஸ் இரவுமுழுவதும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். போலீசார் லத்திகள் மூலம் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். பின் ரத்தக்கறை படிந்த அந்த லத்திகளை அவர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலிசாரிடம் கேட்டபோது அவர்கள் லத்திகளை அளிக்க மறுத்த நிலையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்த பிறகே, அவர்கள் லத்திகளை ஒப்படைத்தனர். இதன்மூலம், ஜெயராஜ், பென்னிக்ஸ் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது புலனாகிறதாக நீதிவிசாரணை அதிகாரி உயர்நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.45 மணியளவில், நீதிவிசாரணை அதிகாரி பாரதிதாசன், சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அந்தநேரத்தில், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் உள்ளிட்ட 2 அதிகாரிகள் இருந்துள்ளனர். தான் விசாரணையை துவக்கியபோது, ஒத்துழைக்க முடியாது என்று ஏஎஸ்பி குமார் என்னிடம் மல்லுக்கட்டினார்.
போலீஸ் ஸ்டேசனின் அன்றாட நடவடிக்கைகள் குறித்த பதிவேட்டை தருமாறு கேட்டபோது அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தபிறகு, ஒவ்வொரு ஆவணங்களாக கொண்டு வந்து தந்தனர். இதன்காரணமாக, அதிக நேரவிரயம் ஏற்பட்டது.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கேட்டபோது தினமும் இரவு அதனை அழித்துவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்ட காட்சிகள் கூட 19ம் தேதி இரவே அழிக்கப்பட்டிருந்தன. ஹார்ட் டிஸ்கை சோதித்தபோது, அந்த காட்சிகள் அழிக்கப்பட்டிருந்தது உறுதியானது.

நீதிவிசாரணை நடைபெறும்போது நிகழ்வுகளை போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டன. முதற்கட்டமாக, கான்ஸ்டபிள் மகாராஜன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். முதலில் மறுத்த அவர் பின் விசாரணைக்கு வந்தார். அவரிடம் பாரதிதாசன் விசாரணை நடத்தியபோது, உன்னால் ஒண்ணும் புடுங்க முடியாது என்று நீதிவிசாரணை அதிகாரியை நோக்கி அவர் கூறியிருந்தார்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட லத்திகள் குறித்து கேட்டபோது, அதை ஊருக்கு கொண்டுபோய்விட்டதாக கூறிய அவர்கள் பின், போலீஸ் குடியிருப்பில் மறைத்து வைத்ததாக தெரிவித்தனர். போய் கொண்டுவர பணித்தபோது அவர்கள் மறுத்தனர். பின் போகமுடியாது என்று கூறினர். இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, போலீஸ் ஸ்டேசனில் இருந்த ஒருவர் வெளியே தப்பியோடினார்.
19ம் தேதி இரவு, அந்த ஸ்டேசனினில் தலைமை காவலர் ரேவதியும் உடன் இருந்துள்ளார். போலீசாரின் இந்த நடவடிக்கைகளால் ரேவதி அதிர்ந்து போயிருந்தார். ரேவதிக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று நீதி விசாரணை அதிகாரி அளித்த உறுதிமொழியின்பேரில், அவர் உண்மைகளை சொல்ல சம்மதித்தார்.

போலிஸ் ஸ்டேசனுக்கு வெளியில் கூடியிருந்த மற்ற போலீசார், நீதி விசாரணை அதிகாாரியை கடும்சொற்களால் வசைபாடிக்கொண்டிருந்தனர். சிலர் இந்த விசாரணை நிகழ்வை தங்களது மொபைல்போனில் பதிவு செய்துகொண்டிருந்தனர்.
ஸ்டேசனில் இருந்த ஒவ்வொரு நிமிசமும் தாங்கள் பாதுகாப்பு இல்லாத நிலையை உணர்ந்ததாக நீதிவிசாரணை அதிகாரி பாரதிதாசன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் குறித்து தமிழக டிஜிபி திரிபாதியிடம் கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலனிடம் கேட்டதற்கு, பிறகு பதிலளிப்பதாக அவர் தெரிவித்தார்.

நீதி விசாரணை அறிக்கை இதுவரை தன்னிடம் வரவில்லை என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்பேரில், புகாருக்குள்ளான காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரவு இன்னும் தனது கைக்கு கிடைக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

போலீசுக்கு புதிய சிக்கல் : ஜெயராஜ் கடைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது கடைகள் மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள மற்றக் கடைகளும் திறந்திருந்தன. மேலும், அவர்கள் இருவரும் போலீஸார் கைது செய்தபோது எந்தப் போராட்டமும் நடத்தவில்லை, போலீஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபடவில்லை. ஜெயராஜ் போலீஸ் வாகனத்திலும், பென்னிக்ஸ் நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளிலும் ஏறி காவல் நிலையம் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
மேலும், இருவரும் நல்ல நிலையில் இயல்பாக நடந்தே செல்கின்றனர். இதன் மூலம் இருவரும் அன்று இரவு காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பிறகே காயமடைந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோ காட்சி சாத்தான்குளம் போலீஸாருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


போலீசார் மீது நடவடிக்கை : தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதியை தரக்குறைவாக பேசிய
காவலர் மகாராஜன் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.