திங்கள், 22 ஜூன், 2020

தவறான தகவல் ராஜதந்திரத்திற்கு மாற்று கிடையாது; மன்மோகன் சிங் பிரதமருக்கு கடிதம்

கல்வான் மோதலைத் தொடர்ந்து கடந்த வாரம் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திங்கள் கிழமை பிரதமர் மோடி “அவரது வார்த்தைகளின் தாக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும் “சீனா தனது நிலைப்பாட்டை நிரூபிக்க அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்க கூடாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தவறான தகவல்கள் இராஜதந்திரம் அல்லது தீர்க்கமான தலைமைக்கு மாற்றாக கிடையாது.” என்று தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் தனது கடிதத்தில், “தவறான தகவல்கள் இராஜதந்திரத்திற்கு அல்லது தீர்க்கமான தலைமைக்கு மாற்று கிடையாது என்பதை நாங்கள் அரசாங்கத்திற்கு நினைவுபடுத்துகிறோம். தவறான அறிக்கைகள் திறமையான கூட்டாளிகளுக்கு ஆறுதல் அளிக்கும். ஆனால், உண்மையை அடக்க முடியாது” என்று அவர் எழுதியுள்ளார்.

சீனப் துருப்புக்கள் எதுவும் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என்ற பிரதமர் மோடியின் கருத்து குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய சில நாட்களுக்குப் பிறகு மன்மோகன் சிங்கின் இந்த கருத்துகள் வெளிவந்துள்ளன. சீனத் துருப்புக்கள் எதுவும் இந்திய பிரதேசத்திற்குள் நுழைவில்லை என்றால் பிறகு எப்படி இந்திய வீரர்கள் உயிரிழந்தனர் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்த கருத்து குறித்து அரசாங்கம் தெளிவு படுத்தியது. ஜூன் 15-ம் தேதி நடந்த நிகழ்வுகள் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழக்க காரணமானது என்றும் அதுபற்றி பிரதமரின் கருத்துக்கு சிலர் தவறான விளக்கம் கொடுக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அனைத்து வருங்கால நடவடிக்கைகளும் முடிவுகளும் வருங்கால தலைமுறையினர் நம்மை எவ்வாறு உணர்வார்கள் என்பதில் தீவிரமான தாக்கங்களைக் கொண்டிருக்கும். அவர்கள் நம்மை வழிநடத்துபவர்கள் ஒரு முழு கடமை பாரத்தை தாங்குகிறார்கள் என்று உணர வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மன்மோகன் சிங் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“நம்முடைய ஜனநாயகத்தில் அந்த பொறுப்பு பிரதமர் பதவி வகிப்பவரிடம் உள்ளது. பிரதமர் தனது வார்த்தைகளின் தாக்கங்கள் மற்றும் நமது நாட்டின் பாதுகாப்பு குறித்த யுக்தி மற்றும் பிராந்திய நலன்களைப் பற்றியும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்” என்று லடாக்கில் சீனாவுடனான முரண்பாடு குறித்து தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


இந்தியா அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படாது என்று கூறிய மன்மோகன் சிங் கூறினார்: “சீனா வெட்கமின்றி சட்டவிரோதமாக இந்திய பிரதேசங்களான கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பங்காங் சோ ஏரி போன்ற பகுதிகளை ஏப்ரல் 2020க்கு இடையில் இன்று வரை பல ஊடுருவல்களால் உரிமை கோர முயல்கிறது. அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களால் நாம் பாதிக்கப்பட மாட்டோம். அல்லது நம்முடைய பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்ய அனுமதிக்க முடியாது” என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காத்து இறந்த வீரர்களுக்கு நீதியை உறுதி செய்யுமாறு அவர் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு குறைவானதைச் செய்வது மக்கள் நம்பிக்கைக்கு இழைக்கப்படும் வரலாற்று துரோகமாகும்” என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மன்மோகன் சிங் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்துக்கு இன்று காலை எதிர்வினையாற்றிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அறிக்கை வெறும் வார்த்தை விளையாட்டு. துரதிர்ஷ்டவசமானது. காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் நடத்தைகள், நடவடிக்கைகள் மற்றும் இதுபோன்ற அறிக்கைகளை எந்தவொரு இந்தியர்களும் நம்பமாட்டார்கள். இதே இந்திய தேசிய காங்கிரஸ்தான் நம்முடைய ஆயுதப்படைகளைக் கேள்வி கேட்டு மனச்சோர்வு அடையச் செய்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பிரதமர் மோடியை இந்தியா முழுமையாக நம்புகிறது. ஆதரிக்கிறது. 130 கோடி இந்தியர்கள் அவரது நிர்வாக அனுபவத்தை மிகவும் சோதனை காலங்களில் கண்டிருக்கிறார்கள். குறிப்பாக அவர் எப்போதுமே நாட்டின் நல்வாழ்வை எல்லாவற்றிற்கும் மேலாக வைத்திருப்பார்.” என்று ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.