கீழடி அகழாய்வில் முதல் முறையாக குழந்தை ஒன்றின் முழு அளவிலான எலும்புகூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
6ம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களில் 40 லட்சம் ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி 19 முதல் நடைபெற்று வருகிறது. கொந்தகையில் சுரேஷ் என்பவரது நிலத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில் 13 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் மூன்று தாழிகளில் உள்ள எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலையில் நடந்த அகழாய்வில் குழந்தை ஒன்றின் எலும்புக் கூடு முழு அளவில் கிடைத்துள்ளது. முதுமக்கள் தாழிகள் முதல் நிலை, 2ம் நிலை, 3ம் நிலை என மூன்று வகைப்படும். முதல் நிலை என்பது பராமரிக்க முடியாத முதியோர்களை உணவு, தண்ணீர் வைத்து அப்படியே புதைப்பது. 2ம் நிலை என்பது வேறு இடத்தில் அடக்கம் செய்தவர்களின் எலும்புகளை தோண்டி எடுத்து தாழியினுள் வைத்து புதைப்பது. கொந்தகையில் கிடைத்து வருவது அனைத்தும் 2ம் நிலை வகையை சேர்ந்தவை என கூறப்படுகிறது. தற்போது குழந்தையின் எலும்பு கூடு கண்டறியப்பட்டது 3ம் நிலை என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.