திங்கள், 29 ஜூன், 2020

சாத்தான்குளம் மரணத்தில் சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும்: வைரமுத்து

சாத்தான்குளம் மரணத்தில் சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

சாத்தான்குளத்தில் நிகழ்ந்த இரட்டை மரணங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து. அதில், குற்றவாளிகள் வேறு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேறு. விசாரணைக் கைதியைக்கூட குற்றவாளி என்று அழைப்பது பிழை. குற்றம் சாட்டப்பட்டவர் என்பதே சரி. ஒருவன் குற்றவாளி என்று தீர்மானிப்பது நீதிமன்றத்தின் பொறுப்பே தவிர, காவல்துறையின் அதிகாரமன்று. காவல்துறையின் அதிகாரம் என்பது உண்மைக்குள் செலுத்தப்படுவதே தவிர, உடலுக்குள் செலுத்தப்படுவது அல்ல.

காவல்துறைக்கென்று வகுக்கப்பட்ட விதிகளை மறந்துவிட்டோம். 1872ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம், விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தக்கூடாது; அவர்கள்மீது வசைமொழி வீசக்கூடாது என்று வகைப்படுத்துகிறது. ஆனால், விசாரணைக் கைதிகளின் உடல்கள் சில காவலர்களுக்கு விளையாட்டு மைதானங்களாகி விடுகின்றன. இரண்டு காவலர்களுக்கு மத்தியில், ஒரு கைதி கால்பந்தாகிவிடுகிறான்.

பாதிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வேண்டும். இனி இதுபோல் பரிதவிக்க விடமாட்டோம் என்ற உறுதிமொழி வேண்டும். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களின் வரம்புகளை சொல்லிக்கொடுக்க வேண்டும். அந்த அதிகாரம் கட்டுப்பாட்டில் செலுத்தப்படுகிறதா என்று கண்காணிக்கவும் வேண்டும்.காக்கை குருவி எங்கள் ஜாதி என்று கவிதை படித்த இனத்தில், இந்துவும் கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் எங்கள் ஜாதியாக இருக்க மாட்டானா? இருக்க வேண்டும். அவனுக்கு இறப்பு வேண்டாம்; இருப்பு வேண்டும். சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.