வெள்ளி, 26 ஜூன், 2020

சாதாரண வழக்கில் கைது செய்து யாரையும் காவல் நிலையம் அழைத்துச் செல்லக்கூடாது: டிஜிபி புதிய சுற்றறிக்கை

சாத்தான்குளத்தில் தந்தை – மகன் இருவரும் நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்த சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாதாரண வழக்கில் கைது செய்து யாரையும் காவல் நிலையம் அழைத்துச் செல்லக்கூடாது என்று டிஜிபி காவல்துறையினருக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கடையடைப்பது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் தந்தை ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் நீதிமன்றக் காவலில் வைத்தனர். இந்நிலையில், ஜூன் 22-ம் தேதி இருவரும் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. தந்தை மகன் இருவரையும் போலீசார் அடித்து சித்ரவதை செய்ததாலேயே இறந்தனர் என்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை முதல்வர் அறிவித்தார்.

இந்த நிலையில், சாதாரண வழக்கில் கைது செய்து யாரையும் காவல் நிலையம் அழைத்துச் செல்லக்கூடாது என்று காவல்துறையினருக்கு டிஜிபி புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை – மகன் இருவரும் ஜூன் 19-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் ஜூன் 22 மற்றும் 23 தேதிகளில் மருத்துவமனையில் உயிரிழந்தனர். அவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதால் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டு செய்தி வெளியாகி உள்ளது. இதே போல, சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பல்வேறு இடங்களில் நீதிமன்றக் காவலில் வைகப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அனைத்து காவல்துறை அலுவலர்களும் குற்றம் சாட்டப்படும் நபர்களை கையாளும்போது அவர்களை தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதுபோன்ற சூழல் மற்ற காவல் நிலையங்களில் மீண்டும் ஏற்பட்டால் காவல்துறைக்கு மிகவும் ஒரு சிக்கலான சூழலை உருவாக்கும். காவல்நிலையத்தை செயல்படுத்துவதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும்.

காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், உதவி காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு காவல் துணை பிரிவிலும் தடுப்புக் காவல் மற்றும் பாதுகாப்பு மையங்களுக்கு முறையான வசதிகளைக் கொண்ட கட்டிடங்களை கண்டறிய வேண்டும். அப்படி கட்டிடங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால் உதவி காவல் ஆணையர்கள், துணை காவல் கண்கணிப்பாளர்கள் அலுவலகங்களை பயன்படுத்தலாம். உதவி காவல் ஆணையர்கள், துணை காவல் கண்கணிப்பாளர்கள் வீட்டில் இருந்தோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து பணிபுரியலாம். குற்றம்சாட்டப்படும் நபர்கள் பிணையில் வரமுடியாத குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இந்த தடுப்பு காவல் மற்றும் பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்ற சட்டங்களின் முன்பு காவல் நிலையங்களுக்கு ஆஜர்படுத்த கொண்டுவர வேண்டும்.

இந்த தடுப்புக்காவல் மையங்களில் ஒரு பொதுப் பதிவு பராமரிக்கப்பட வேண்டும். இதற்கு உதவி காவல் ஆணையர் அல்லது துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஒரு காவல் ஆய்வாளர் அளவிலான ஒரு அலுவலர் பராமரிக்க நியமிக்கப்பட வேண்டு.

கைது செய்யப்பட்ட பிறகு கொரோனா வைரஸ் திரையிடலுடன் மருத்துவப் பரிசோதனை நடத்திய பிறகு இந்த இடங்களுக்கு போலீஸ் தரப்பு குறைந்தபட்ச குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கொண்டு வந்து வைத்திருக்க வேண்டும்.

இந்த தடுப்பு மையங்களில் அனைத்து முறையான ஆவணங்களும் செய்யப்பட வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற காவல்துறைக்கு வழங்கிய உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக இருந்தாலும்கூட காவல்துறையினர் எலக்ட்ரானிக் வீடியோ இணைப்பு மூலம் நீதிமன்றங்கள் முன்பு குற்றம்சாட்டப்பட்டவர்களை ஆஜர்படுத்த வேண்டும். இந்த உத்தரவில், காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், உதவி காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் இதற்கான இன்றியமையாத ஏற்பாடுகளி செய்ய வேண்டும். இந்த விஷயம் பற்றி நீதிபதிகளுக்கு தகவல் தெரிவித்திருக்க வெண்டும்.

குற்றம் சாட்டபட்ட நபர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டால், அந்த நபரை அருகிலுள்ள சிறைக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த நபரை குறிப்பிட்ட சிறைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்துவது காவல்துறையின் கடைமையாக இருக்க வேண்டும்.

அந்த நபருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், தடுப்புக் காவல் மையத்தின் பொறுப்பு எஸ்.ஐ. அந்த நபரை கைது செய்ததில் உடல் ரீதியாக ஈடுபட்ட அனைத்து காவல் அலுவலர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதுபோல தனிமைப்படுத்தும் இடங்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த இடங்களுக்கு காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளரால் நியமனம் செய்யப்பட்ட ஆய்வாளர்கள், இந்த மையங்களின் பொறுப்பாளராக இருக்க வேண்டும்.

இந்த தூய்மை நடவடிக்கைகள் இதுபோன்ற தடுப்புக்காவல் மையங்களில் கடைபிடிகக் வேண்டும். மேலும், அங்கே கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

கைது செய்யப்படும்போது இந்த நடைமுறைககளை பின்பற்ற வேண்டும். முதலில் எல்லா பிணையில் விடக்கூடிய வழக்குகளில் கைது செய்யப்படும்போது அந்த நபரை உடனடியாக பிணையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவரை உடல் ரீதியான தொடுதல் குறைந்தபட்ச காவல் அலுவலர்களால் செய்யப்பட வேண்டும். பிணையில் விடுவிக்க முடியாத வழக்கில் கைது செய்வதற்கு திட்டமிட்டால், மூத்த காவல் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு உபரகரணங்கள் அணிந்து அனைத்து முன்தடுப்பு முறைகளையும் இன்பற்றி அந்த கைது நடவடிகையில் குறைந்த எண்ணிக்கையில் காவலர்கள் ஈடுபட வேண்டும். கூடுமான வரைல் குற்றம்சாட்டப்பட்ட நபர் உடன் உடல் ரீதியான தொடுதல் தொடர்புகளை தவிர்க்க வேண்டும்.

காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை எந்த பிசகலும் இல்லாமல் கட்டயமாக கடைபிடிக்க வேண்டும்” என்று டிஜிபி அறிவித்துள்ளார்.