செவ்வாய், 30 ஜூன், 2020

மூச்சுத் திணறல்; வெண்டிலேட்டர் தரமறுத்த டாக்டர்கள்; இறப்பதற்கு முன் கொரோனா நோயாளி பகிர்ந்த வீடியோ

ஐதராபாத்தில் உள்ள அரசு செஸ்ட் மருத்துவமனையில் கடந்த வாரம் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி, அவரை வென்டிலேட்டரில் வைக்க மறுத்ததாகக் கூறி இறந்தார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மருத்துவமனை அதிகாரிகள், அந்த நோயாளி இதயத்துடிப்பை அதிகரித்து மையோகார்டிடிஸ் ஏற்பட்ட பின்னர் இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.

வீடியோவில் இறப்பதற்கு முன்பு அந்த நோயாளி மருத்துவமனையின் தனிமைப்படுத்தும் வார்டில் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில், அவர் தனது தந்தையிடம் பேசியுள்ளார். 35 வயதான வி ரவிக்குமார், அவருக்கு சுவாசப் பிரச்னை இருப்பதாக மருத்துவர்களிடம் புகார் தெரிவித்த பிறகும், மருத்துவர்கள் அவருக்கு வெண்டிலேட்டரை வழங்கவில்லை என்று கூறியுள்ளார். அந்த நோயாளி வீடியோவில், “கடந்த 3 மணி நேரமாக என்னை வென்டிலேட்டரில் வைக்குமாறு அவர்களிடம் மன்றாடி வருகிறேன். நான் சுவாசிக்க சிரமப்படுகிறேன். என் இதயம் நின்றுவிட்டதைப் போல உணர்கிறேன். அவர்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை. அவர்கள் என்னை வென்டிலேட்டரில் வைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் அந்த வீடியோவில்,  “பை அப்பா. அனைவருக்கும் பை, பை அப்பா” என்று கூறியுள்ளார்.

ரவிக்குமார் ஜூன் 24ம் தேதி காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே நாளில் அவரிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருந்தனர். இந்த நிலையில், அவர் 2 நாட்களுக்குப் பிறகு மரணம் அடைந்தார். 27-ம் தேதி வந்த பரிசோதனை அறிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதியானது.

உயிரிழந்த ரவிக்குமாரின் தந்தை தனது மகனை ஒரு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு பட்ட சிரமத்தைப் பற்றி கூறுகையில், “எனது மகன் ஜூன் 23 அன்று அதிக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். அனைத்து மருத்துவமனைகளும் அவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தன. எனது மகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகித்து, முதலில் ஒரு பரிசோதனை அறிக்கையை கேட்டார்கள். நாங்கள் குறைந்தது 12 மருத்துவமனைகளை பார்த்தோம். ஆனால், பரிசோதனை அறிக்கை இல்லாமல் யாரும் அனுமதி வழங்கவில்லை.” என்றார்.

அடுத்த நாள் குடும்பத்துடன் கர்கானாவில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தை பார்வையிட்டனர். அங்கு ஊழியர்கள் சோதனை மாதிரிகள் அதிக அளவில் உள்ளதால் மூசாபேட்டில் உள்ள அவர்களுடைய மற்றொரு கிளைக்கு அனுப்பினார்கள்.

நிஜாமின் மருத்துவ அறிவியல் நிறுவனம் (நிம்ஸ்) மற்றும் காந்தி பொது மருத்துவமனை உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றபின், தனது மகன் ஜூன் 24-ம் தேதி செஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ரவிக்குமாரின் தந்தை வெங்கடேஸ்வர்லி கூறினார்.

மருத்துவமனையில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நோயாளிக்கு வெண்டிலேட்டர் வழங்க மறுத்ததால் இறந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து எர்ராகடாவில் உள்ள அரசு மார்பு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் மஹபூப் கானைத் தொடர்பு கொண்டபோது, ​​குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அந்த நோயாளி மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் காலமானார் என்றும் கூறினார்.

வீடியோவில், ரவிக்குமாரை ஆக்ஸிஜன் வழங்குவதற்காக நாசி முனைகளுடன் இருப்பதைக் காணலாம்.

“அவர் ஒரு கோவிட் நோயாளி என்று சந்தேகிக்கப்படுகிறது. நாங்கள் அவரை தனிமை வார்டில் அனுமதித்து ஆக்ஸிஜன் சப்ளை செய்தோம். அவரது உடல் நிலை பராமரிக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, அவர் இதயத்துடிப்பை அதிகப்படுத்தி மயோகார்டிடிஸைஉருவாக்கினார். அது இதயத்தின் திடீர் நிறுத்தத்துக்கு வழிவகுத்தது. அவரது விஷயத்தில் இதுதான் நடந்தது” என்று கண்காணிப்பாளர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

மேலும், நோயாளி ரவிக்குமார் இறந்த ஒரு நாள் கழிந்த பிறகுதான் கொரோனா வைரஸிற்கான பரிசோதனை முடிவு பெறப்பட்டதாக அந்த அதிகாரி உறுதிப்படுத்தினார்.

ஐதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை 983 புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜூன் 28-ம் தேதி நிலவரப்படி தெலங்கானாவின் கோவிட்-19 எண்ணிக்கை 14,414 ஆக உள்ளது. அவர்களில் 9,000 பேர் சிகிச்சையில் உள்ளனர். அம்மாநிலத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 247ஐ எட்டியுள்ளது.