ஞாயிறு, 21 ஜூன், 2020

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் - ஓ பன்னீர்செல்வம், ஸ்டாலின் பங்கேற்பு

இந்திய- சீன மோதல் விவகாரம் தொடர்பாக, பிரதமர் கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

லடாக் அருகே இந்திய எல்லை பகுதியில் உள்ள நல்லான் பகுதியில் சீன வீரர்கள் தாக்குதலில் 23 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரம் இருநாடுகளுக்கிடையே பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன பொருட்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், இந்திய எல்லையில், சீனா ராணுவம் தாக்குதல் நடத்திய விவகாரம் குறித்து விவாதிக்க, பிரதமர் மோடி தலைமையில், வீடியோ கான்பரன்ஸ் முறையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளனர்.

LAC நிலைப்பாடு குறித்து, இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச உள்ளார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள 15க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில், சோனியா காந்தி (காங்கிரஸ்), ஸ்டாலின் (திமுக), மம்தா பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), துணை முதல்வர் பன்னீர்செல்வம் ( அதிமுக), உத்தவ் தாக்ரே ( சிவசேனா), சந்திரசேகர ராவ் (தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி), சிராக் பஸ்வான் ( லோக் ஜனசக்தி), சுக்பீர் சிங் படேல் ( சிரோன்மணி அகாலிதளம்), நவீன் பட்நாயக் (பிஜூ ஜனதாதளம்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), சரத்பவார் ( தேசியவாத காங்கிரஸ்), ஜெகன் மோகன் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்), நிதீஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்), மாயாவதி (பகுஜன் சமாஜ் கட்சி) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் 5 எம்பிக்களும் மேல் கொண்ட கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 எம்பிக்களை கொண்ட ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை.