சென்னையை அலங்கோலமாக உருமாற்றி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் கீழ் கடந்த 19ஆம் தேதி முதல் வருகிற 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு பெரு நகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டுமே அதிகரித்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மதுரை மாவட்டத்தில் இன்று (ஜூன்.22) வரை மொத்தம் 849 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, கொரோனா தொற்று அதிகரிப்பால் மதுரையில் முழு ஊரடங்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை டவுன் பஞ்சாயத்து, திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரக பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, “ஊரடங்கு காலத்தில்,
மருத்துவமனைகள், மருந்து ஆய்வகங்கள், மருந்து கடைகள், ஆம்புலன்ஸ் சேவைகள் மட்டும் செயல்படும்.
ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை. அதே நேரத்தில், ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் மருத்துவ காரணங்களுக்காக மட்டும் செல்லலாம். ரயில்வே மற்றும் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை அழைத்து செல்லும் ஆட்டோ, டாக்சிகளுக்கு அனுமதி உண்டு. இதற்கு, அதில் பயணிப்பவர்கள் இ-பாஸ் பெற வேண்டும்.
மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் மட்டும் செயல்படும். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, போலீஸ் வருவாய் மற்றும் பேரிடர் துறை, மின்சாரம், கருவூலத்துறை ஆவின், உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, உணவு நகர்வோர் துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் தேவைக்கு ஏற்ப செயல்படுவார்க்ள.
மதுரையில் முழு ஊரடங்கு:
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி.
ஆன்லைன் உணவு நிறுவன பணியாளர்கள் தகுந்த அடையாள அட்டையுடன் வேலை செய்யலாம்.
டீ கடைகளுக்கு அனுமதி இல்லை.#lockdown
மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஊழியர்கள் பணிக்கு வர தேவையில்லை. அதற்கு அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
வங்கிகள் 33 சதவீத ஊழியர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும். ஏடிஎம், வங்கி சார்ந்த சேவைகள் மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் இயங்க அனுமதியுண்டு.
பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேசன் கடைகள் செயல்படாது. அங்கு வீடுகளுக்கே வந்து பொருட்கள் வழங்கப்படும்.
காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், பெட்ரோல் பங்குகள், கட்டுப்பாடுகளுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி உண்டு. நடமாடும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம். மக்கள் வீடுகளில் இருந்து ஒரு கி.மீ., சுற்றளவிற்குள் உள்ள கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க வேண்டும்.
ஓட்டல்களில் காலை 6 முதல் இரவு 8 மணி வரை பார்சல் உணவுக்கு மட்டும் அனுமதி உண்டு. தேநீர் கடைகளுக்கு அனுமதியில்லை.
மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள் செயல்பட அனுமதி உண்டு.
அம்மா உணவகங்கள், சமுதாய கூடங்கள் செயல்படும்” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.