திங்கள், 29 ஜூன், 2020

தலைவர்களின் அடுத்தடுத்த ராஜினாமா : சிக்கலில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமை!

பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் ராஜினாமா செய்திருப்பது கட்சித் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் கடந்த 30 ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்தவர் விஜேந்திர யாதவ். லாலு பிரசாத் யாதவுக்கு பக்க பலமாக இருந்த இவர் அக்கட்சியின் கிங் மேக்கராக அழைக்கப்படுபவர். முன்னாள் எம்,எல்.ஏவான இவர் அக்கட்சியில் மாநில துணைத்தலைவராகவும் இருந்துள்ளார். 

இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு அக்கட்சியில் முறையாக அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து தான் விலகுவதாக விஜேந்திர யாதவ் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், முன்பு போல் அல்ல தற்போது லாலு பிரசாத் யாதவ் மாறிவிட்டார். எனவே மாற்றம் அவசியம். அதனால் தான் கட்சியில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்துள்ளார். 

"நான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக கட்சியால் புறக்கணிக்கப்பட்டுள்ளேன். லாலு எனக்கு தலைவர், அவர் தொடர்ந்து அப்படியே இருப்பார். கட்சியில், மூத்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், புதிய தலைவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுகிறார்கள். 

பல கட்சி கூட்டங்களில், நான் மேடையில் இருந்தபோது கூட பேச எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். 

இப்போது, எந்தவொரு பழைய தலைவருக்கும் இந்த கட்சியில் மரியாதை கிடைக்கவில்லை. நான் 1984 முதல் அரசியலில் இருக்கிறேன். லாலுவுடன் நான் அரசியலைத் தொடங்கிய விதம், அவருடன் அதே வழியில் முடிப்பேன் என்று நினைத்தேன். ஆனால் இனி ராஷ்டிரிய ஜனதா தளம் இல்லை இந்த கட்சியுடன் எனது அரசியல் பயணத்தை நான் முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறேன், நான் வெளியேற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என விஜேந்திர யாதவ் தெரிவித்தார்

கடந்த 30 ஆண்டுகளாக நான் இந்த கட்சியுடன் இணைந்திருந்ததால் தற்போது வெளியேறுவது என்பது எனக்கு வருத்தமளிக்கிறது. நான் இன்னும் பொதுமக்களின் பார்வையில் ஒரு தலைவராக இருக்கிறேன். கட்சியில் எனக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதபோது, பின்னர் எப்படி நான் இங்கே இருக்க முடியுமா? அதனால்தான் இந்த கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார். 

2

நான் எந்தவொரு கட்சியிலும் சேரவோ அல்லது புதிய கட்சியை தொடங்கவோ இதுவரை யோசிக்கவில்லை. மரியாதை கிடைக்கும் கட்சியில் இணைவேன், ஆனால் இனி ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருக்க மாட்டேன்" என விஜேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.


பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர் விலகியிருப்பது பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். சமீபத்தில் அக்கட்சியின் 5 எம்.எல்.சிக்கள் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பீகார் மாநில துணை தலைவருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் சில தினங்களுக்கு முன்னதாக அக்கட்சியிலிருந்து விலகியிருந்தார்.

தலைவர்களின் அடுத்தடுத்த ராஜினாமா அக்கட்சி தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.