இந்தியா முழுவதும் 58% -க்கும் மேலாக இருக்கும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வழங்கிய வி.பி.சிங் பிறந்த தினம் இன்று. டிசம்பர் 2, 1989ம் ஆண்டில் இருந்து நவம்பர் 10 1990 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார். 11 மாதங்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பணியாற்றிய போதிலும் இவர் ஆற்றிய சாதனைகள் மிகப் பெரியது. இன்றும் இட ஒதுக்கீட்டின் நாயகனாக கோடிக்கணக்கான மக்களின் மனதில் வாழ்ந்து வருகிறார் வி.பி. சிங் என்று அழைக்கப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங்.
மக்களவை உறுப்பினராக பணியாற்றிய வி.பி. சிங்
1931ம் ஆண்டு ஜூன் மாதம் உத்திரப்பிரதேசம் தையா சமஸ்தானத்தின் ராஜாவுக்கு மகனாக பிறந்தவர். டெராடூன், உ.பி. மற்றும் புனேவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்த இவர் 1950ம் ஆண்இல் எம்.எஸ்.சி. படிப்பை முடித்தார். வினோபாவே பூமிதான இயக்கத்தில் ஆர்வம் கொண்ட அவர் அரசியலில் கால் வைத்தார். உ.பி. சட்டசபை சேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நின்று போட்டியிட்ட அவர் 1971ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இந்திரா காந்தி அமைச்சரவையில் வர்த்தக அமைச்சரவையில் துணை அமைச்சராக பணியாற்றினார். ராஜீவ் காந்தியின் ஆட்சியில் அவர் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தார். நேர்மையாகவும், சிறப்புடனும் பணியாற்றிய அவர் மீது ஏற்பட்ட பழி சொல் தாங்காமல் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீங்கினார். பிறகு அலகாபாத் மக்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
தேசிய முன்னணி
காங்கிரஸையே எதிர்த்து போட்டியிடும் நாள் வரும் என்று அவர் அன்று நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஜன் மோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தள், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளை இணைத்து 1988இல் ஜனதா தளத்தை உருவாக்கினார் வி.பி.சிங். அதன் பின்னர், திமுக, தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத் போன்ற மாநில கட்சிகளும் உதவியுடன் தேசிய முன்னணி அமைத்தார். இதற்கு இடதுசாரிகளும், பாஜகவும் வெளியே ஆதரவு அளித்தது. இந்த கூட்டணி 1989ம் ஆண்டு தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றியை பெற்றது.
சாதனைகள்
மண்டல் கமிஷன் எனப்படும் Socially Backward Classes Commission கமிஷன் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 27% இட ஒதுக்கீட்டினை பரிந்துரை செய்தது. சரண் சிங் பிரமதராக இருந்தபோது 1979ல் அமைக்கப்பட்டது. பிகார் மாநில முதலமைச்சராக இருந்த பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரின் பரிந்துரைகள் ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி அரசால் பின்பற்றபடவில்லை. ஆனால் 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பரிந்துரைகளை அமல்படுத்தினார்.
காவிரி நீரை எந்தெந்த மாநிலங்கள் எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் காவிரி நடுவர் மன்றம் இவருடைய ஆட்சி காலத்தில் தான் அமைக்கப்பட்டது.
விவசாயக்கடன்களை ரத்து செய்தார். இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதி படையை திரும்ப பெற்றுக் கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பை அவர் பெற்றார்.