சனி, 27 ஜூன், 2020

இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதா என்று பிரதமர் நாட்டு மக்களுக்கு உண்மையை கூறவேண்டும்” - ராகுல் காந்தி

இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதா என்பது தொடர்பாக பிரதமர் மோடி உண்மையை பேச வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

 

சீனாவுடனான கல்வான் மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பெரும் வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. சீனாவிடம் பிரதமர் சரணடைந்து விட்டார் என்று காங்கிரசும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் 48,000 கி.மீ இந்திய நிலம் சீனாவிடம் தாரைவார்க்கப்பட்டதாக பாஜகவும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றன.

 

இந்நிலையில் இந்திய- சீன எல்லை விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், இந்தியாவின் ஒரு அங்குலம் கூட யாராலும் பறிக்கப்படவில்லை என்றும், ஊடுருவல் எதுவும் இல்லை என்றும் பிரதமர் கூறியதாக தெரிவித்தார். ஆனால் கிழக்கு லடாக்கில் மூன்று இடங்களில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதுடன் வல்லுநர்களும் அதே கருத்தைக் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் அவர் பேசுகையில், ‘பிரதமர் மோடி பயப்படாமல் நாட்டு மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும். சீனா நம் நாட்டு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டது என்றும், நாங்கள் அவர்களுக்கு எதிராக செயல்படப் போகிறோம் என்றும் தைரியமாக வெளிப்படையாக சொல்லுங்கள். நாடு முழுவதும் உங்களுக்கு பின் நிற்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து சீனாவை வெளியேற்றுவோம்’ என்று கூறியுள்ளார். சீனா நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் பட்சத்தில், பிரதமர் ‘இல்லை’ என்று கூறினால் அது அந்நாட்டிற்குதான் பயனளிக்கும் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.