சனி, 20 ஜூன், 2020

தீவிரவாதிகளுக்கு உதவிய வழக்கில் சஸ்பெண்டான காஷ்மீர் டி.எஸ்.பிக்கு ஜாமீன்!

 தீவிரவாதிகளை தனது வாகனத்தில் அழைத்துச் சென்ற காஷ்மீர் டிஎஸ்பிக்கு ஜாமீன் கிடைத்தது.

டெல்லி காவல்துறையினர் குறித்த நேரத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாததால் முன்னாள் காஷ்மீர் டிஎஸ்பி தேவிந்தர் சிங்கிற்கு ஜாமீன் கிடைத்திருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்தவர் தேவிந்தர் சிங். ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களுக்கு உதவும் வழக்கறிஞர் ஒருவரையும் காஷ்மீரிலிருந்து தனது வாகனத்தில் டெல்லிக்கு அழைத்து சென்ற போது பிடிபட்டார். பிடிபட்ட தீவிரவாதிகள் டெல்லியில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

டிஎஸ்பி தேவிந்தர் சிங் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தேவிந்தர் சிங் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் டெல்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் ஜாமீன் தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதனை ஏற்று ரூ.1 லட்சம் செலுத்தி சொந்த ஜாமீனில் செல்லலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.