ஜூன் 26ம் தேதி, சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா. ஆதரவு தினம். அந்நாளில் வெளியிடப்பட்ட India: Annual Report on Torture 2019 என்ற அறிக்கையில், இந்தியாவில் 2019ம் ஆண்டில் மட்டும் 1606 மரணங்கள் நீதிமன்ற விசாரணையின் போதும், காவல்துறை விசாரணையின் போது 125 நபர்களும் உயிரிழந்ததாக அறிவித்துள்ளது. இந்த 125 நபர்களில் 14 பேர் உத்திரபிரதேசத்தில் உயிரிழந்துள்ளனர். தமிழகம் மற்றும் பஞ்சாபில் தலா 11 நபர்களும் பீகாரில் 10 நபர்களும் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் “லாக்டவுன் விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடையை திறந்து வைத்த காரணத்தால் காவல்துறையினர் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் இருவரையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று (19/06/2020) கைது செய்தனர். விசாரணை என்ற பெயரில் மிகவும் மனிதாபிமானற்ற முறையில் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் உயிரிழந்ததாக திங்கள்கிழமை (22/06/2020) அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தூத்துக்குடி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் சமூக வலைதளங்களிலும் பலரும் காவல்துறையினரால் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை முன் வைத்து #JusticeforJayarajandFenix என்ற ஹேஷ்டேக்கினை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சந்திரகுமாரின் கருத்து
ஆண்டாண்டு காலமாக நடைபெறும் அடக்கு முறைகளில் மாற்றம் ஏதும் இது வரை ஏற்படவே இல்லை என்கிறார் லாக்கப் நூலின் எழுத்தாளர் சந்திரகுமார். விசாரணை என்ற படம் உங்களுக்கு ஞாபகம் இருந்தால் சந்திரகுமாருக்கான அறிமுகம் உங்களுக்கு தேவையில்லை என்றே கருதுகின்றேன். “தான் செய்யாத குற்றங்களுக்காக 2 வாரம் காவல் விசாரணை என்ற பெயரில் நடைபெற்ற காவல் நிலைய அடக்குமுறைகள் குறித்து அவருடைய புத்தகம் பேசியது”. 1983ம் ஆண்டு அவருக்கு காவல்நிலையத்தில் கிடைத்த அனுபவம் குறித்தும் 37 வருடங்களில் இந்திய சிறைத்துறையில் ஏற்படும் அடக்குமுறைகள் குறித்தும் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸூடன் உரையாடினார்.
கோவை ஹோப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து யாரிடம் கேட்டாலும் ஆட்டோ சந்திரனை அடையாளம் காட்டிவிடுவார்கள். புத்தகம் மற்றும் சினிமா என்று இல்லாமல் தன் சக மனிதன் மீது அவர் காட்டும் அக்கறையும் அரவணைப்பும் அவரை அப்பகுதியில் மிகவும் பிரபலமாக்கியுள்ளது.
மனித உரிமைகளை மீறும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் மற்றும் ஆயுத படை மாற்றம் என்பது இறந்தவர்களுக்கான நீதியாக இருக்குமா?
பெருங்கூட்டத்தை கட்டுப்படுத்த, சமூக ஒடுக்குமுறைக்கு பயன்படுத்தப்படும் படை தான் ஆயுதப்படை. இருவரை கொலை செய்தலை ஒரு அடிப்படை தகுதியாக நினைத்து இவர்கள் அப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மூர்க்கத்தனம், ஈவிரக்கமற்ற செயல்களுக்கு மேலும் கூர்தீட்டவே இவர்களை இங்கு அனுப்பியுள்ளது போல் இருக்கிறது. இதனால் அவர்களின் சம்பளமும் சீருடை அதிகாரங்களும் குறையப் போவதில்லை. நிச்சயமாக இது இறந்துபோனவர்களுக்கான நீதி கிடையாது.
மன உளைச்சல் தான் காரணம் என்று கூறப்படும் கூற்று?
24 மணி நேரமும் காவல் காக்கும் நினைப்புடன் அவர்கள் உளவியல் ரீதியாக தயாரிக்கப்பட்ட பிறகு தான் பணியில் பொறுப்பேற்கின்றார்கள். மக்களுக்கு விபத்தின்மையை உருவாக்கியும், உள் வன்முறைகளை ஒடுக்கி அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதுதான் அவர்களின் வேலை. ஆனால் வெளிப்புறத்தில் இருக்கும் காவல்துறைக்கான எழுத்துப்பூர்வமான பிம்பத்தில் இருந்து வேறுபட்டு நடைமுறையில் இருக்கின்றனர். சட்ட ஒழுங்கு சீர் கெட்டு லஞ்சம் கீழ் இருந்து மேல் மட்டம் வரை நிலைத்திருக்கிறது. அது ஒரு நிர்வாகம் போல் இயங்குகிறது. அதனை மொத்தமாக மாற்றாமல் இது போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளுக்கான தீர்வினை எட்ட முடியாது. ஒன்றை சீர் செய்ய வேண்டியதற்கான போராட்டம் அனைத்தையும் சீர் செய்யும் நோக்கத்துடன் இருக்க வேண்டும். மக்கள் வீட்டில் இருப்பதால், சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருப்பதால் காவலர்களுக்கு வருகின்ற உபரி வருமானம் வராமல் போய்விட்டது. அதுவேண்டுமானால் அவர்களுக்கு உளைச்சலை தந்திருக்கலாமே தவிர இவர்கள் பார்க்கும் வேலை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டது என்பதை கூற முடியாது. அது சுய கழிவிரக்கம். அது பொய். இது போன்ற மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை ஸ்ட்ரெஸ் என்று அங்கீகரிக்க கூடாது.
கேள்வி கேட்பாரற்ற அமைப்பாக இயங்குகிறது காவல்துறை
கட்டட்டற்ற நிலையை நோக்கி அவர்கள் செல்கிறார்கள். மக்களை மதிக்க வேண்டாம். மனிதர்களை இழிவு செய்வதன் மூலம் மலினமாக்கி அவர்களின் குரல்களை ஒடுக்கும் நிலையை தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். ரத்தினபுரி சம்பவத்தில் “கப்பலே நின்று போய் உள்ளது. ரயில்களும் இயங்கவில்லை. கோடி கணக்கில் பொருட்கள் தேங்கியுள்ளது. எனவே நீங்கள் கடையை எடுங்கள்” என்றால் அவர்கள் எடுத்திருப்பார்கள். ”நீ வாய் பேசாதே” என்பது அடக்கு முறை தான். மகன் முன்னாள் தாயை இழிவு செய்தால் அவன் திருப்பி கேட்க தான் செய்வான். தன்னுடைய குட்டிகளை தீண்டினால் நாய் கடிக்கத்தான் செய்யும். கோழிக்குஞ்சுகளுக்கு ஏதேனும் தீங்கென்றால் கூட தாய் கோழி கழுகினை திருப்பி தாக்கத்தான் செய்யும். குடும்ப உறவுகளுக்கு மத்தியில் அதிகாரத்தை பயன்படுத்தும் போது அவ்வுளவியலை உணர்ந்து செயல்பட வேண்டும். அதை மீறி தந்தையை தாக்கினால் மகன் தடுத்து நிறுத்தத்தான் செய்வான். அதை செய்யவில்லை என்றால் அவன் சரியான மகன் இல்லை. பல்வேறு இடங்களில் அரசு பணியாளர்கள் ரோந்து செல்கிறார்கள். வியாபாரிகள் விதிமுறைகளை மீறினால் சரக்கினை எடுத்துச் செல்லலாம் அல்லது கடையை சீல் வைக்கலாம். காவல்துறையின் எண்ணம் சட்ட ஒழுங்கினை சீர்படுத்துவதாக இல்லை. அவர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதாகத்தான் இருந்தது. அதற்கு ஒத்துழைக்காத வணிகர்களை காவல்துறை தாக்குகிறது.
கொலை குற்றமாக பதிவு செய்யப்பட வேண்டும்
இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். பணி நீக்கம், இடமாற்றம், பணியிடை நீக்கம் இதற்கு தீர்வல்ல. காயம் குறித்த மருத்துவ சான்றிதழ் கொடுத்த மருத்துவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பது தான் ஜனநாயகத்தை நிலைநாட்டும். இதை செய்யவிட்டால் மக்கள் தங்களின் எதிர்வினையை காட்டத்தான் செய்வார்கள். பால்வள சங்கம் காவல்துறையினருக்கு பால் சப்ளை செய்ய மாட்டோம் என்று கூறியிருப்பதும் எதிர்வினை தான். இது போன்ற நவீன போராட்டங்கள் அடிக்கடி நடக்கத்தான் செய்யும்.
ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு ஆதரவாக திரண்ட கூட்டம் ஏன் தற்போது சாத்தான்குளம் மரணங்களுக்கு எதிராக கூட மறுக்கிறது?
ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நடந்த அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வரவேற்கத்தக்கவை. இங்கும் மக்கள் தெருக்களில் நின்று போராடி, ஊடகங்கள் வாயிலாக, ஜார்ஜ்க்கான ஆதரவாக அது மாற்றப்பட்டது. ஜார்ஜ் ஃப்ளாய்ட்டிற்கான போராட்டங்கள் இங்கு அரசியல் மாற்றத்தை கொண்டுவருவதில்லை. ஆனால் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ்கான போராட்டம் இங்கு அரசியல் மாற்றத்தை கொண்டு வரும். சாத்தான்குளம் மரணங்கள் தொடர்பாக மக்கள் போராட்டம் நடத்தலாம். ஆனால் மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான எதிர்வினை என்பது வருகின்ற தேர்தலில் மட்டும் தான் வெளிப்படும். பால்வள சங்க உறூப்பினர்கள், வணிகர் சங்கங்கள் தங்களின் எதிர்வினையாற்றியுள்ளனர். இவ்வாறாக தொடர்ந்து வரலாற்றில் தங்களுக்கான நியாயங்களுக்காக மக்கள் போராடி வருகின்றனர்.
ஒருங்கிணைக்க கூடிய ஒரு சாதிய கட்டமைப்பின் பின்னணி இந்த போராட்டத்தை துணிந்து நடத்த காரணமாக இருக்கிறது. ஒரு தலித் அல்லது சிறுபான்மையினர் இவ்வாறு கொல்லப்பட்டால் இது போன்ற போராட்டம் சாத்தியமா?
நாள் தோறும், ஆண்டு தோறும் தலித்கள் மீதான வன்முறைகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. அன்று கேட்காமல் விட்டவர்கள் இப்போது அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. அப்போது கேட்டிருந்தால் இன்று அதிகாரமட்டம் தன்னை மற்றி அமைத்திருந்திருக்கும். தனி அமைப்பாக தலித் மக்கள் திரண்ட பிறகு இது போன்ற வன்முறைகள் குறைந்துள்ளது. ஆனாலும் தினமும் தலித் மக்கள் மீதான வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கிறது. பெருமதவாத பிரச்சனைகள் காரணமாகவே மதுரை இஸ்லாமியர் கவனிக்கப்படாமல் போனார். ஆனால் அப்பகுதி இஸ்லாமியர்கள் தேர்தல் காலத்தில் நிச்சயம் இதனை மனதில் வைத்து செயல்படுவார்கள். ஜனநாயகத்தை நம்பும் மக்கள் சரியான காலம் வரும் போது நிச்சயம் இது போன்ற கொலைகளுக்கு எதிர்வினையாற்றுவார்கள்.
சிசிடிவி கேமராக்கள் பொருத்தினால் மக்கள் மீதான வன்முறைகள் குறையும் என்று நினைக்கின்றீர்களா?
காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகின்றோம். ஆனால் அந்த சிசிடிவி கேமராக்கள் என்பது காவல் நிலையத்திற்கான பாதுகாப்பாகவே பார்க்கப்படுகிறது. காவல் நிலையங்களை நோக்கி வரும் பெருந்திரள் மக்களை, கும்பல்களை அடையாளப்படுத்தவே பயன்படுகிறது. ஆனால் காவல்நிலையத்திற்குள் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள இயலாது. இதை கேட்டால் அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படையாக வைப்பது என்பது இயலாத காரியம் என்று அவர்கள் கூறுகின்றார்கள். மேலும் காவல்துறைக்கு கைதிகள் அழைத்து வரப்படுவதற்கு முன்பே லாட்ஜ்கள் அல்லது கல்யாண மண்டபங்களில் அடைக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்ட பின்னரே அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அரசு தரப்பின் கூற்றை எப்படி பார்க்கிறீர்கள்?
லாபகர நோக்கங்களுக்காக திட்டங்களும், அறிக்கைகளும் ஒரு நிர்வாக அமைப்பு முறை போன்று தான் அரசு செயல்படுகிறது. லாபகர நோக்கம் கொண்ட பலரால் ஆட்டுவிக்கப்படும் ஒரு அமைப்பாகவே இருக்கிறது இந்த ஜனநாயகம். மக்களால் தேர்வு செய்யப்படும் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தலுக்கு பிறகு மக்களின் நண்பர்களாக இல்லாமல் அதிகார மையத்தில் இருக்கும் பலரின் சொல் கேட்கும் ஒரு அமைப்பாக மாறியுள்ளனர். இன்றைய தமிழ் சமூகத்திற்கு நல்ல தலைவர்கள் தான் தேவையே தவிர நிர்வாக திறன் கொண்ட முதல்வர்கள் தேவையில்லை.