திங்கள், 29 ஜூன், 2020

சீன நிறுவனங்களிடம் பிரதமரின் நிவாரண நிதியம், கோடிக்கணக்கான ரூபாய் பெற்றது நியாயமா? - ப.சிதம்பரம்

சீன நிறுவனங்களிடம் பிரதமரின் நிவாரண நிதியம், கோடிக்கணக்கான ரூபாய் பெற்றது நியாயமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீன ராணுவத்தினர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,
பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார், இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டில்  ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு, சீனாவிடமிருந்து ஒரு கோடியே 45 லட்ச ரூபாய் நன்கொடை பெற்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,  பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதமரின் நிவாரண நிதியம், சீன நிறுவனங்களுடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் நிதி பெற்றது, மாபெரும் குற்றமல்லவா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.  கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில்  சீன நிறுவனங்கள் பிரதமரின் நிதியத்திற்கு நிதி அளித்துள்ள அதே சமயத்தில், சீனத் துருப்புகள் எல்லையில் ஊடுருவியுள்ளது எப்படி எனவும் அவர் வினா எழுப்பியுள்ளார்.