1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான யூசுப் மேமன், மகாராஷ்டிரா சிறையில் உயிரிழந்தார்.
மும்பை மாநகரில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி 12 இடங்களில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் ஏற்பாட்டின் கீழ் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட, தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட சிலர் தலைமறைவாகினர். அவர்கள் தற்போது வரை தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர்.
இந்நிலையில், குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற யூசுப் மேனன் என்பவர் மும்பை நாசிக் சாலையில் உள்ள சிறையில் இன்று உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த யூசுப் மேனன், இந்த வழக்கில் தற்போது வரை தலைமறைவாக இருக்கும் டைகர் மேமனின் சகோதரர் ஆவார். இதே வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்களின் மற்றொரு சகோதரரான யாகூப் மேமன், கடந்த 2015-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.