செவ்வாய், 30 ஜூன், 2020

தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 31 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடனும் தளர்வுகளுடனும் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள 5வது கட்ட ஊரடங்கு நாளை ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று அறிவித்துள்ளார். மேலும், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், அதே போல, செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை அமல்படுத்திய 12 நாள் முழு ஊரடங்கு உத்தரவு ஜூலை 5-ம் தேதி வரை தொடரும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதல்வர் பழனிசாமி விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை உடனுக்குடன் வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தான் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது. அதே நேரத்தில், தமிழக அரசு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருவதுடன், சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்த்தும், ஊரகத் தொழில்களை மீட்டெடுத்தும் தொழில் வளத்தைப் பெருக்க புதிய திட்டங்களை செயல்படுத்தியும் வருகின்றது.

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதே சமயம், ஏழை மக்கள் ஊரடங்கால் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் களைய, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரேசன் பொருட்கள் அனைத்தும், 2.01 கோடி குடும்பங்களுக்கும் விலையில்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளதுடன், கட்டடத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள் ஆகியோருக்கு அரிசி போன்ற பொருட்களை கூடுதலாக வழங்கியும், அனைத்து 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மற்றும் பல்வேறு துறையில் உள்ள பிற நல வாரிய தொழிலாளர்களை சேர்த்து 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே தலா 1,000 ரூபாய் வழங்கியதைப் போல், மீண்டும் தலா 1,000 ரூபாய் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்கள்.

ஜூன் 29 இன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தற்போது எடுக்கப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதால் தான், கொரோனா நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள்
கொண்டுவர முடிந்தது எனவும், நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்த வேண்டும் என கருத்துகளை தெரிவித்தார்கள். பல்வேறு தினங்களில் முதலமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக ஜூன் 22 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை தளர்த்துவதற்காக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், ஜூன் 29 இன்று பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த
அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தற்போது ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு, ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

எனினும் முழு ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள பகுதிகளான பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய்ப்பரவலை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005ன் கீழ் ஜூன் 19 அதிகாலை 12.00 மணி முதல் ஜூன் 30ம் தேதி இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 24-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் ஜூன் 30-ம் தேதி இரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு, கொரோனா நோய்த்தொற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியதால், இந்த முழு ஊரடங்கு மேற்கண்ட பகுதிகளில் மட்டும் ஜூலை 5-ம் தேதி வரை தொடரும்.

ஜூன் 19ம் தேதிக்கு முன்னர் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே ஜூலை 6-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும். அதேபோல் மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூன் 24-ம் தேதிக்கு முன்னர் இப்பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே ஜூலை 6-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தொடரும்.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காய்கறி, பழக்கடைகளைப் போன்று, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.ஏற்கனவே நடைமுறையில் செயல்பாடுகளுக்கானதடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.