வியாழன், 25 ஜூன், 2020

மரணத்தின் ஆட்டம்: ப.சிதம்பரம் கட்டுரை

ப.சிதம்பரம், கட்டுரையாளர்

இந்தியாவும், சீனாவும் சண்டையிடுகிற காலத்தில் இருக்கிறார்களா? அதுபோலத்தான் தெரிகிறது. முதலில் சீனத்துருப்புகள் திருட்டுத்தனமாக, கண்டுபிடிக்க முடியாமல் இந்திய எல்லைக்குள் சில கிலோமீட்டர்கள் ஊடுருவினார்கள். கால்வன் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்க்ஸ் மற்றும் பாங்காங் டிஎஸ்ஓவின் முக்கிய பகுதிகளை அவர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். மே மாதம் 5 மற்றும் 6ம் தேதி நடந்த மோதல் இந்த ஊடுருவலை வெளிக்கொண்டு வந்தது. அடுத்ததாக, ஜீன் 15 மற்றும் 16ம் தேதி இரவில், சீனத்துருப்புகள் மற்றும் இந்திய துருப்புகள் இடையேயான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் இறந்தனர். 80 பேர் காயமடைந்தனர். 10 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச்செல்லப்பட்டு, ஜீன் 18ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.

1962ம் ஆண்டு போர் முதல், இந்திய – சீன எல்லை அல்லது சரியான கட்டுப்பாட்டு கோடு தயார் நிலையிலே உள்ளது என்றாலும், 1975 முதல் இதுவே முதல் முறை நாம் உயிர்களை இழந்தது. 45 ஆண்டுகள் அமைதியை காத்துவந்தது அர்த்தமற்றதாக உள்ளது. திரு. மோடியின் கீழ் உள்ள அரசில் அந்த அமைதி குலைந்துவிட்டது.

ஒரு தவறான கதை

கடந்த ஆறு ஆண்டுகளில் மோடியின் அரசு உறுதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற கதை முற்றிலும் தவறானது. திரு.நரேந்திர மோடி, முன்னர் குஜராத் முதலமைச்சர், சீனர்களுக்கு பிடித்தவர். மற்ற பிரதமர்களைவிட மோடி, 5 முறை சீனாவுக்கு சென்றுள்ளார். குறிப்பாக இரண்டு நாடுகளிடையே நல்ல உறவை வளர்ப்பதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. திரு.மோடி மற்றும் திரு.ஷி இருவரிடையேயும் உள்ள சிறந்த உறவு 2018ம் ஆண்டு வுகானிலும், 2019ம் ஆண்டு மகாபலிபுரத்திலும் அவர்கள் சந்தித்துக்கொண்டபோது நன்றாகவே தெரிந்தது. இவை அனைத்தும் இந்த பொய்யாக சித்தரிக்கப்பட்ட கதையின் அம்சங்கள். இவையனைத்தும் ஜீன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் உடைக்கப்பட்டது.

அந்த மோதலில், உயிர்களை இழந்த பின், இந்தியா சமாதானத்தை நினைவூட்டுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சகம் பலவீனமான அறிக்கையை அளித்தது. சீனாவின் ஒருதலைபட்சமான நிலை மாற்றத்தின் முடிவாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடுமையான மோதல் நடந்தது. இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளும் சரியான கட்டுப்பாட்டு கோட்டின் இந்திய பகுதிகளில் நடந்தது. அதுவே சீனாவிடம் இருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு சீனாவின் தாக்குதல் கடுமையாகவும், துரிதமாகவும் இருந்தது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியின் உரிமை முழுவதும் சீனாவையே சார்ந்தது என்று கூறியது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். பிராந்திய ஒற்றுமையை சீனா பாதுகாக்கும் என்று இந்தியா அந்நாட்டை குறைத்து மதிப்பிடக்கூடாது.

உளவுத்துறையின் தோல்வி

சீனா, இந்தாண்டு மே மாதத்தில் ஏன் அவ்வாறு நடந்துகொண்டது என்பதற்கு நிறைய காரணங்கள் கூறப்படுகிறது. ஊடுருவல் அளவு கடந்த சில மாதங்களாக நன்றாக திட்டமிடப்பட்டுள்ளது. ஜம்மூ – காஷ்மீரின் அரசியலமைப்பு அந்தஸ்தை மோடி அரசு மாற்றியமைத்த 2019ம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இருக்கலாம். அரசு ஒன்று கவனிக்கவில்லை அல்லது ஒதுக்கி தள்ளியிருக்கவேண்டும். லடாக்கில், சீனா பெரும் நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. அங்குதான் அது தலைமை உரிமையை கோருகிறது. அது கில்ஜிட் – பல்ஜிஸ்தான் வழியாக பாகிஸ்தானுடன் இணைக்கும் சாலை பகுதியை ஆக்கிரமித்துள்ளது. அது லடாக்கின் ஒரு பகுதியாகும். அங்குதான் சரியான கட்டுப்பாட்டு கோட்டில் இந்திய பகுதியில் சாலை அமைப்பதற்கு சீனா ஆட்சேபனை தெரிவிக்கிறது. அக்ஷய் சின் பகுதி இந்தியாவின் பகுதி என்ற உள்துறை அமைச்சரின் வார்த்தையை சீனா குறித்துக்கொள்ள வேண்டும்.

சீனாவின் உள்நோக்கங்களை இந்தியா சந்தேகப்படாது என்பது அலட்சியப்படுத்த முடியாத உண்மை. இந்தியாவின் தன்னிறைவுக்காக யார் மீதாவது பழி கூற வேண்டுமென்றால், அது ஏற்கனவே அங்குள்ள நமது வெளியுறவு துறையின் உளவுத்துறை மற்றும் உள்துறையின் உளவுத்துறையை ஆகும். ஏற்கனவே கார்கிலில் நடந்த தவறை மீண்டும் செய்துள்ளது. குறிப்பாக விண்வெளியில் இருந்து நமக்கு அன்றாடம் செயற்கைகோள் உதவியால், படங்களும், போட்டோக்களும் வந்துகொண்டிருக்கும் இந்த காலத்தில் இதை மன்னிக்க முடியாத தவறாகவே பார்க்க முடியும். கார்கிலுக்கும், கால்வன் பள்ளத்தாக்குக்கும் இடையே உள்ள வேறுபாடு, இங்கு விரோதி திறமையற்ற பாகிஸ்தான் கிடையாது, தந்திரக்கார சீனா. டெப்சாங்கில் (2013), இந்தியா, சீனாவுக்கு நல்ல பாடம் புகட்டியது. சீனா முழுமையாக பின்வாங்கியது. டேக்லாமில் (பூடான், 2017) சீனா, இந்தியாவின் பலம் மற்றும் பலவீனம் குறித்து மதிப்புமிக்க பாடத்தை கற்றது. சீன துருப்புகள் பின்வாங்கியதை இந்தியா கொண்டாடியது. ஆனால், டோக்லாம் பீடபூமி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில், இன்றுவரை சீனாவின் கட்டமைப்புகளை இந்தியா அமைதியாக ஏற்றுக்கொண்டது.

திரு.மோடியின் தவறு

டோக்லாமில் கற்ற பாடத்தை கால்வன் பள்ளத்தாக்கிலும், நடைமுறைப்படுத்துகிறது மற்றும் நடைமுறைப்படுத்தும். மேலும், பாங்காங் டிஎஸ்ஓவிலும் நடைமுறைப்படுத்தும். நான்காவது விரல் (சீனாவைப்பொறுத்தவரை சரியான கட்டுப்பாட்டு கோடு) மற்றும் விரல் 8 (இந்தியாவைப்பொறுத்தவரை சரியான கட்டுப்பாட்டு கோடு) க்கு இடையில் உள்ள பகுதியிலும் நடைமுறைப்படுத்தும். கால்வன் பள்ளத்தாக்கு இழப்பையும் தவிர்த்திருக்க வாய்ப்பிருந்தது. ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்னர், ஜீன் 6ம் தேதி, திரு.மோடி, திரு ஷியை போனில் தொடர்புகொண்டு, இரண்டு பக்க பேச்சுவார்த்தையின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும்படி கூறியிருக்கவேண்டும். ஜீன் 15 மற்றும் 16ம் தேதி நடைபெற்ற துயரச்சம்பவம் நடந்திருக்காது. இது திரு.மோடியின் மிகப்பெரிய தவறு.

21ம் நூற்றாண்டு, சீனாவும், இந்தியாவும் தலைமை ஏற்கும் ஆசிய நூற்றாண்டு என்ற திரு.மோடியின் கனவு முடிந்துவிட்டது. திரு.ஷியை, திரு.மோடி சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது தெரிந்துவிட்டது. ஆனால், திரு.ஷி, திரு.மோடியை நன்றாகவே புரிந்துகொண்டுள்ளார். இந்த இரு தலைவர்களும் மீண்டும் நல்ல நண்பர்களாக இருக்க முடியாது. அவர்கள் இப்போதும் வியாபாரம் செய்ய முடியும். திரு. நரசிம்மராவ், திரு வாஜ்பாய் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோர் சீனாவின் தங்கள் சகாக்களிடம் செய்ததைப்போல், ஒரே நேரத்தில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடியும். சரியான கட்டுப்பாட்டு கோடு உள்ளிட்ட 4,056 கிலோமீட்டர் நீள எல்லையில் அமைதியை நிலைநிறுத்த முடியும்.

உறுதியாக இனி எந்த உச்சி மாநாடோ அல்லது அதிகாரமோ இருக்காது. கடுமையான பேச்சுவார்தைகள்தான் நடக்கும். திருவள்ளுவர் என்ற தமிழ்ப்புலவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கூறியதை மோடி நினைவகொள்வது அவருக்கு உதவியாக இருக்கும்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணை வலியும் தூக்கிச் செயல்

(செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனின் வலிமையும், இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்) என்பதை மனதில் கொண்டு உங்கள் செயலை செய்யுங்கள்.

இக்கட்டுரையை எழுதியவர் ப.சிதம்பரம், முன்னாள் மத்திய நிதி அமைச்சர்.

தமிழில்: R. பிரியதர்சினி.