செவ்வாய், 30 ஜூன், 2020

ஜூலை 27ல் இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள்!

பிரான்ஸ் விற்கும் ரஃபேல் போர் ...

பிரான்சிலிருந்து முதற்கட்டமாக 6 Rafale போர் விமானங்கள் ஜூலை 27ம் தேதி இந்தியாவை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - சீனா இடையே எல்லையில் பதற்றமான சூழல் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவின் போர்திறனை உயர்த்தும் வகையிலான 6 ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை 27ல் பிரான்சில் இருந்து இந்தியாவை வந்தடையும் என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானங்களின் வருகை இந்திய விமானப் படையின் போர் திறனை மேம்படுத்தும் என்றும், எதிர்த்து நிற்கும் நாடுகளுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பும் வகையில் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அம்பாலா (ஹரியானா) விமானப்படை தளத்தில் இந்த போர் விமானங்கள் நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. 

கடந்த 2016ம் ஆண்டு ரூ.60,000 கோடி செலவில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் ஒரு அங்கமாகவே தற்போது ரஃபேல் விமானங்கள் இந்தியா வர உள்ளன. இவை முழுமையான அளவில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டவையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.


இந்த விமானம் சக்திவாய்ந்த ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. இந்த விமானங்களில் பொருத்தப்படக்கூடிய ஏவுகணைகள் மூலம் 150 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்க முடியும். இந்த போர் விமானங்கள் அதிநவீன வசதிகளை கொண்டது. இதன் மூலம் வானில் இருந்து வானுக்கும், வானில் இருந்து நிலத்துக்கும் தாக்குதலை மிகத்துல்லியமாக நடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானிகள் சிலருக்கு முதல்கட்டமாக பிரான்ஸ் ஏர்பேஸில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு 2வது கட்டமாக மேலும் சில விமானிகள் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படவிருக்கிறார்கள். 2வது கட்டமாக வரவிருக்கும் ரஃபேல் போர் விமானங்கள் மேற்கு வங்காளத்தின் ஹசிமாரா தளத்தில் நிறுத்தப்படும் என கூறுகின்றனர். இரண்டு தளங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்திய விமானப்படை இதற்காக ரூ.400 கோடி செலவிட்டுள்ளது.


ரஃபேல் விமானங்கள் பாகிஸ்தான் மற்றும் சீன விமானப்படைகளுக்கு சவால்விடுக்கக்கூடியவை என்றும் 2 நாடுகளின் போர் விமானங்களும் நிகரில்லாத திறன் பெற்றவை என்பதால் இந்தியாவுக்கு அசுர பலத்தை ரஃபேல் விமானங்கள் அளிக்க இருப்பதாக பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியாவுக்கு பெரும் சாதகமான அம்சமாக ரஃபேல் இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.