தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் முடியும் 2021-ம்ஆண்டுக்கு முன்பாகவே நன்னடத்தை விதியின் கீழ் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கூறி வந்தனர்.
சிறைத்துறை சார்பில், அடுத்த 30 நாட்களுக்குள் வெளியாகும் கைதிகளின் பட்டியல் அவ்வப்போது வெளியிடப்படும். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள கைதிகள் பட்டியலில், சசிகலாவின் பெயர் இடம்பெறவில்லை.
கைதிகளின் விடுதலைக்காலம், அவர்கள் தண்டனைவிபரம், சிறப்பு அனுமதியின் மூலம் எத்தனை நாட்கள் பரோலில் வெளியே சென்றுள்ளார் உள்ளிட்ட விபரங்கள் கணக்கில் கொள்ளப்படும்.
கர்நாடக சிறைத்துறை விதிகளின்படி, சிறையில் நன்னடத்தை விதிகளின்படி, மாதம் ஒன்றிற்கு 3 நாட்கள் நிவாரணம் வழங்கப்படும். மற்ற 3 நாட்களில், அவர்களுக்கு தெரிந்த தொழிலை செய்ய அனுமதி அளிக்கப்படும். சிறப்பு அனுமதியின் கீழ், சிறைக்கண்காணிப்பாளர் ஆண்டிற்கு 30 நாட்கள் விடுமுறை அளிக்கலாம். இன்ஸ்பெக்டர் ஜெனரலின் அனுமதியின் பேரில் ஆண்டிற்கு 60 நாட்கள் வரை விடுமுறை அளிக்கலாம். இதனிடையே, சசிகலா, வரும் ஆகஸ்ட் மாதம் சிறையிலிருந்து விடுதலையாக வாய்ப்புகள் இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி ஊடகங்களிடையே தெரிவித்துள்ளதாவது, சசிகலா உள்ளிட்ட 3 பேரின் விடுதலை குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.
அவர்கள் விடுதலையாவது உறுதியானால், அதற்கு முன்னதாக உள்ள 30ம் தேதிக்குள் முன்பே தெரிவிக்க வாய்ப்பு உண்டு. அதற்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளதாக அவர் கூறினார்.