புதன், 17 ஜூன், 2020

காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும் - தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு!

10 மற்றும் 11ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தயாரிப்பு பணிகளுக்காக காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல், 11-ம் வகுப்புக்கான வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களுக்கான பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாள்கள், மதிப்பெண் பதிவேடுகள் ஆகியவற்றை மாணவர்களின் பதிவு எண் அடிப்படையில்  மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே ஜூன் 22 ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப் புத்தகங்களை  விநியோகிக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஜூன் 22 முதல் 30-ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கே சென்று வழங்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.