கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கை, உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி, அந்தந்த மத சடங்குகளைப் பின்பற்றி அடக்கம் செய்து வருவதாக, SDPI கட்சியின் தன்னார்வ தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மண்ணடியில் இன்று கொரோனா வைரஸ் தொற்று தாக்கி உயிரிழந்த 42 வயது மதிக்கத்தக்கவரை, வண்ணாரப்பேட்டையில் உள்ள முஸ்லிம் அடக்க ஸ்தலத்தில் SDPI கட்சியின் தன்னார்வ தொண்டர்கள் அடக்கம் செய்தனர். சென்னையில் அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த 31 உடல்களுக்கு இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்திருப்பதாக, எஸ்டிபிஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்ஸாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தாக்கி உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காக பிரத்யேக குழுக்களை உருவாக்கியிருப்பதாக கூறும் ஜூனைத் அன்ஸாரி, பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக பின்பற்றி, மாநகராட்சி அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அடக்கம் செய்வதாக குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் தொற்று தாக்கி உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் பணி, சென்னையில் மட்டுமல்லாது, தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரியிலும் நடைபெறும் வகையில் எஸ்டிபிஐ கட்சி, பிரத்யேக குழுக்களை அமைத்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.