செவ்வாய், 16 ஜூன், 2020

ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கான தீர்வு அல்ல - ஸ்டாலின்

ஊரடங்கோ அல்லது முழு ஊரடங்கோ, அது மட்டுமே கொரோனாவுக்கான தீர்வு என்ற மாயையில் அ.தி.மு.க. அரசு இருப்பதாகத் தெரிகிறது. முதலில் அந்த மாயையிலிருந்து அரசு வெளியே வர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள விவகாரம் குறித்த ஸ்டாலின் பேஸ்புக் பதிவில், “முழு ஊரடங்கு அமலாகும் என்பது வதந்தி என்று இரண்டு நாட்களுக்கு முன்புதான் முதலமைச்சர் சொன்னார். 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு என்று இன்று அவரே சொல்லி இருக்கிறார். ஆட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை! இந்த முழு ஊரடங்கையாவது முறையான ஊரடங்காக அமல்படுத்த வேண்டும்!

ஊரடங்கோ அல்லது முழு ஊரடங்கோ, அது மட்டுமே கொரோனாவுக்கான தீர்வு என்ற மாயையில் அ.தி.மு.க. அரசு இருப்பதாகத் தெரிகிறது. முதலில் அந்த மாயையிலிருந்து அரசு வெளியே வர வேண்டும்.

பரிசோதனைகளை விரிவாகவும் விரைவாகவும் செய்தல், தொற்றுக்கான தொடர்புகளைக் கண்டறிதல், உரிய சிகிச்சை அளித்தல் மூலமாகவே கொரோனா தொற்றைத் தடுக்க முடியும் என்பதை அரசு உணர வேண்டும்.

கொரோனா ஒழிப்பு என்ற ஒன்றைத்தவிர மாற்றுச் சிந்தனை இல்லாமல், அனைத்திலும் வெளிப்படைத் தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும்“ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts: