சனி, 21 நவம்பர், 2020

பெங்களூரு கலவரம்: கைதான காங்கிரஸ் தலைவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

 பெங்களூரு கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவரும், பெங்களூரு நகர முன்னாள் மேயருமான சம்பத் ராஜ் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 11ம் தேதியன்று பெங்களூருவில் நடைபெற்ற  கலவரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகந்த ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் வீடு தீயிட்டு கொளுத்தப்பட்டது. எம்.எல்.ஏவின் உறவினரான இளைஞர் ஒருவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு காரணமாக அவரின் வீட்டுக்கு முன் திரண்ட மர்ம நபர்கள் அவரின் வீட்டை தீயிட்டு கொளுத்தினர். மேலும் பொது சொத்துகளுக்கும் தீ வைத்தனர்.

கலவரத்தை அடக்க வந்த காவல்துறையினர் மீது கல் எறியப்பட்ட நிலையில் அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

2

இந்த கலவரத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனிடையே, பெங்களூரு கலவர வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த வந்த முன்னாள் பெங்களூரு மேயர் சம்பத் ராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைதானார். முன்னாள் மேயர் சம்பத் ராஜ் ரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த அக்டோபர் 30ம் தேதியன்று காவல்துறையினருக்கு கல்தா கொடுத்து விட்டு தப்பினார். அது முதலே அவர் தலைமறைவானார்.

இந்நிலையில், விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சம்பத் ராஜை 14 நாட்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.