ஞாயிறு, 15 நவம்பர், 2020

விருத்தாசலம் சிறையில் கைதி உயிரிழந்த விவகாரம்: குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் பணியிடமாற்றம்!

Image

விருத்தாசலம் சிறையில் கைதி உயிரிழந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


கடலூர் மாவட்டம் காடாம் புலியூரை சேர்ந்த முந்திரி வியாபாரி  செல்வமுருகன், கடந்த மாதம் 30-ந்தேதி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விருத்தாசலம் கிளைச்சிறையில் அடைக்கபட்டார். கடந்த 4-ந்தேதி இரவு செல்வமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு,  திடீரென உயிரிழந்தார். 


இதை தொடர்ந்து செல்வமுருகனின் இறப்பில் மர்மம் உள்ளதாகவும் அவரது சாவுக்கு காரணமான போலீசாரை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி, செல்வமுருகனின் உடலை வாங்க  மறுத்து,  செல்வமுருகனின் மனைவி மற்றும் உறவினர்கள் 8 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.  இந்த வழக்கை  சி.பி.சி.ஐ.டி. துணைக்காவல் கண்காணிப்பாளர் குணவர்மன் விசாரித்து வருகிறார். இந்நிலையில் சிறையில் கைதி உயிரிழந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெய்வேலி டவுன்ஷிப் ஆய்வாளராக இருந்த ஆறுமுகத்தை கடலூர் முதுநகர் காவல்நிலையத்திற்கு இட மாற்றம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன் உத்தரவிட்டுள்ளார்.