Shaju Philip , Manish Sahu
SC plea today, journalist Siddique Kappan’s family asks: Aren’t we citizens? : ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, தற்கொலை தூண்டுதலுக்கு காரணமாக வழக்கு ஒன்றில் கைதாகி ஒரே வாரத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியே வந்தார். ஆனால் அதே நேரத்தில் 41 நாட்களுக்கும் மேலாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மற்றொரு ஊடகவியாலாளருக்கு நீதி தாமதமாகி வருகிறது. அவர்களின் குடும்பத்திற்கு இது மிக நீண்ட காத்திருப்பு காலமாக இருக்கிறது.
அர்னாபிற்கு ஜாமீன் கிடைத்தது தெரிந்த பின்பு, என்னுடைய கணவருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்று நான் நினைக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகி உள்ளேன். கைதுக்கு பிறகு நீதிமன்றம் மற்றும் சிறை அதிகாரிகள் அவரை பார்க்க கூட எங்களை அனுமதிக்கவில்லை. அவர் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. நாங்கள் நீதிமன்றம் முதல் அரசின் பல்வேறு மட்டங்களில் இருக்கும் அதிகாரிகளை சந்தித்துவிட்டோம் ஆனால் எங்களுக்கு நீதி கிட்டவில்லை. நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லையா என்று சித்திக் கப்பன் மனைவி ரைஹானா கேள்வி எழுப்புகிறார். டெல்லியை சேர்ந்த ஊடகவியாலாளர் உ.பி.யின் மதுராவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 5ம் தேதி அன்று, மலையாள செய்தி இணையமான அழிமுகத்திற்காக பணியாற்றி வரும் கப்பன் மதுராவில் கைது செய்யப்பட்டார். 19 வயது தலித் இளம்பெண் ஒருவர் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தாக்குதலுக்கு ஆளானர். பின்னர் அவர் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் இழந்தார். அக்டோபர் 6ம் தேதி ஆட்கொணர்வு மனுவை கேரளாவின் வொர்க்கிங் ஜெர்னலிஸ்ட் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் விசாரணை இன்று நடைபெறுகிறது.
ஹத்ராஸ் விவகாரத்தை பயன்படுத்தி மதக்கலவரத்தை தூண்ட காம்பஸ் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினர்கள் மூன்று பேருடன் கப்பன் பயணித்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது உ.பி. காவல்துறை. மேலும் உபா, தேச துரோக வழக்குகளும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவின் மலப்புரத்தில் உள்ள டெல்லியைச் சேர்ந்த கப்பனின் குடும்பத்திற்கு, கோஸ்வாமிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் காத்திருப்பின் கடுமையான நினைவூட்டலாக அமைந்துள்ளது.
“நீதித்துறையும் கூட எங்களை கைவிட்டுவிட்டது என்று நான் நினைக்கிறேன். நீதி அனைவருக்கும் சமமாக வழங்கப்படவில்லை. நீதி என்பது அனைவருக்கும் இல்லை, சிலருக்கு மட்டுமே. அர்னாப் கோஸ்வாமியின் விஷயத்தில் மட்டும் அனைத்தும் எப்படி வேகமாக நகர்ந்தன? ’’ என்கிறார் ரைஹானா.
மேலும் படிக்க : மக்களின் தேர்வாக காங்கிரஸ் இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது – கபில் சிபல்
நவம்பர் 11 ம் தேதி, கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கிய விசாரணையின் போது, மகாராஷ்டிராவை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கப்பன் கைது செய்யப்பட்டதைக் குறிப்பிட்டார். சிபல் 32வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும், இது கீழ் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் கூறினார்.
கப்பன் 9 வருடங்களுக்கு முன்பு டெல்லிக்கு இடம் பெயர்ந்தார். கேரளாவை தளமாக கொண்டு செயல்படும் செய்தி நிறுவனங்களுக்கு பணியாற்றி வருகிறார். மேலும் குடும்பத்திற்காக உழைக்கும் ஒரே நபராக அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. கேரளா யூனியன் ஆஃப் வொர்க்கிங் ஜேர்னலிஸ்ட்ஸின் டெல்லி பிரிவு செயலாளராகவும் இவர் உள்ளார்.
அவர் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. ஹத்ராஸிற்கு செல்ல என் கணவரிடம் பணம் இல்லை. அங்கே செல்லும் யாரையாவது தெரிந்தால் தெரியப்படுத்தவும் என்று நண்பர்களிடம் கூறியுள்ளார். அப்படி தான் அவர்களுடன் ஹத்ராஸிற்கு இவர் பயணமாகியுள்ளார் என்று கப்பனின் மனைவி கூறுகிறார்.
சித்திக்கின் 90 வயது தாயாருக்கு இந்த கைது தொடர்பாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. அவர் டெல்லியில் இருக்கிறார் மிக விரைவாக வீடு திரும்புவார் என்று கூறியுள்ளோம். நல்ல வேளை அவருக்கு அல்சைமர் நோய் இருப்பதால் எப்போது சித்திக் பற்றி அவர் கேட்டாலும் முதல் இரவு, அம்மா தூங்கும் போது சித்திக் போனில் பேசியதாக பொய் கூறி வருகிறோம் என்று கூறுகிறார் ரைஹானா.
தன்னுடைய கணவரை வெளியில் எடுப்பதற்காக பல்வேறு கட்சி அலுவலகங்களுக்கு அலைந்து திரிவதாக தெரிவித்துள்ளார் ரைஹானா. நான் பல கட்சி தலைவர்களை சந்தித்தேன். அவர்கள் எனக்கு உதவினார்கள். ஆனால் இந்த வழக்கு உத்திரப்பிரதேசத்த்ஹில் இருப்பதால் அவர்களால் இது தொடர்பாக வேறேதும் செய்ய இயலவில்லை என்றும் கூறியுள்ளதாக குறிப்பிட்டார். நான் உடைந்து போயுள்ளேன். ஆனால் எங்களுடைய மூன்று குழந்தைகளுக்காக நான் போராடியாக வேண்டும். கப்பன் மற்றும் ரைஹானாவிற்கு 17 வயது, 12 வயது மற்றும் 7 வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடந்த வாரம், ரைஹானா தனது கணவருக்காக கேரள முதல்வர் அலுவலகத்தின் தலையீட்டை நாடினார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க டெல்லியில் உள்ள மாநில வதிவிட ஆணையருக்கு அரசாங்கம் உத்தரவிட்டதாக ஒரு முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி கூறினார். “எங்களுக்கு வரம்புகள் உள்ளன. பத்திரிகையாளரின் குடும்பமும் அதை அறிந்திருக்கிறது. ஆனால் முன்னேற்றங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம், ’’ என்றார் அவர்.
கேரளாவின் டெல்லி ரெஸிடெண்ட் கமிஷனராக பணியாற்றுகிறார் சஞ்சய் கார்க். இந்த நிகழ்வு நடைபெற்ற போது, இந்த சம்பவத்தின் நிலைமை குறித்து என்னிடம் விசாரிக்கப்பட்டது. என்னால் என்ன செய்ய முடியும். உத்திரபிரதேச காவல்துறையின் கீழ் இருக்கும் இந்த வழக்கில் எனக்கு அதிகாரம் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
கப்பன் மற்றும் அவருடன் இருந்த மூன்று நபர்களை கடந்த வாரம் 48 மணி நேரம் எஸ்.டி.எஃப். அதிகாரிகள் மதுராவில் விசாரனை நடத்தியுள்ளனர். கப்பனுடன் சேர்ந்து கைதான மூன்று நபர்களுக்கும் ஜாமீனுக்கான மனுவை தள்ளுபடி செய்துள்ளது மதுரா நீதிமன்றம். : “ஹேபியாஸ் கார்பஸ் இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கப்பனின் ஜாமீன் விண்ணப்பம் நகர்த்தப்படவில்லை.” என்று கூறினார் இந்த மூன்று நபர்களுக்காகவும் ஆஜரான வக்கீல் மதுபன் தத் த்வேதி.
நீதிமன்ற பதிவுகளின்படி, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ், மற்றும் ஐபிசி பிரிவுகள் 124-ஏ (தேசத்துரோகம்), 153-ஏ ( மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295-ஏ (மத உணர்வுகளை சீற்றப்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள்) அவர்கள் மீது வழக்குகள் மாந்த் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மதுரா நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் ஹத்ராஸில் உள்ள சந்த்பா காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கிலும் இந்த 4 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.