திங்கள், 30 நவம்பர், 2020

திராவிட அரசியலும்…. அம்மன் படங்களும்!

 தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக அம்மன் படங்கள் திகழ்கின்றன. தமிழில் வெளிவந்த முதல் ஒலியில்லா திரைப்படம் கூட ‘கீசக வதம்’ எனும் பக்தி படம் தான். 1918ம் ஆண்டு இத்திரைப்படம் திரையிடப்பட்டது.

தமிழ் சினிமாவில் அம்மன் படங்கள் வெறும் பக்தியோடு நிற்கவில்லை. மாறாக, பெண்ணிய நீதி குறித்த ஜனநாயக வாசத்தை தட்டி எழுப்புகிறது. தமிழ்நாட்டில் நடுத்தர வர்க்க மக்களை அடையாளப்படுத்தியது அம்மன் படங்கள் தான். அதே போன்று, கிராமங்களில் வழிபட்டு வந்த பல அம்மன் தெய்வங்களுக்கு நகர வாழ்வியலை அறிமுகப்படுத்தியதும் அம்மன் படங்கள் தான்.

உதாரணமாக, பல படங்களில் அம்மன் மாறு வேடத்தில் தனது பக்தையைக் (பொதுவாக, படத்தின் கதாநாயகி மற்றும் அவரது குடும்பத்தினர்) காப்பாற்ற மருத்துவராகவும், கார் ஓட்டுனராகவும், அமெரிக்கா வாழ் இந்தியராகவும் வருவதுண்டு.

அம்மன் ஆசிரியையாக வரும் காட்சி. படம் : பாளையத்து அம்மன்

 

அம்மன், அமெரிக்கா வாழ் இந்தியராக வரும் காட்சி. படம் – ராஜகாளி அம்மன்

 

பெண்ணிய நீதியை நிலைநாட்டும் பொருட்டு தடையற்ற உருமாற்றத்திலும், இடமாற்றத்திலும் அம்மன் கதாப்பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டன. மூன்றாம் உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகள் இறக்குமதி செய்த  சட்டம், நீதி, நியாயங்கள் எல்லாம் அம்மன் படங்களில் மறுஉருவம் பெற்றது. அம்மன் படங்களில் நீதியின் பன்முகத் தன்மை வெளிப்பட்டது. நன்மை- தீமை கணக்குகள் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தொழிநுட்பத்துடன்  முடித்து வைக்கப்பட்டன. அம்மனின் கோபமான பார்வையாலும், ஆக்ரோசமான நடனத்தினாலும் சட்டத்திட்டங்கள்  உயிரோட்டம் பெற்றன. சுருங்க சொன்னால், அம்மன் படங்கள் ஒவ்வொன்றும் ஒருவகையான அரசியல் மேடை, ஜனநாயக வாசம், கல்வியறிவு.

தென்னிந்தியாவில் சினிமாவும், அரசியலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிக்கிறது. உதரணாமாக, 1949ல் பெரியார் திராவிட கழகத்தில் இருந்து பிரிந்த திமுக, இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக அரசியலில் களமிறங்கும் தனது விருப்பத்தை பராசக்தி திரைப்படத்தில் வரும் நீதிமன்ற காட்சியின் மூலம்  தெரிவித்தது (எம். எஸ். எஸ் பாண்டியன்). இங்கே, சினிமா அரசியலுக்காக பயன்படடுத்தப்பட்டது என்பது பொருள்ளல்ல, மாறாக மொழிவழி மாநிலங்களில் ஒரு நுட்பமான, தன்னிச்சையான அரசியல் ஈடுபாடுகளை சினிமா முன்னெடுத்தது என்றே கூறலாம்.

அம்மன் படங்களிலும், தமிழக அரசியலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. லிசா ப்ளேக், எம்.எஸ்.எஸ் பாண்டியன், சி. எஸ் . லக்ஷ்மி, மேரி எலிசபத் ஹன்காக், கல்பனா ராம் போன்ற பல ஆய்வாளர்கள் இத்தகைய கூற்றை நேராகவும், மறைமுகமாகவும் தங்களது ஆய்வுக் கட்டுரைகளில் வெளிபடுத்தியுள்ளனர்.

தமிழக அரசியலின் மையப்பகுதி தமிழன்னை. தமிழ்த்தாய், தமிழன்னையின் மடி, தமிழ்தாயின் கருவறை, முப்பாலூட்டிய தமிழன்னை, தமிழன்னையின் மானம், கற்பு, தமிழன்னையின் தவிப்பு போன்ற முழக்கங்கள் இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கு மிகப்பெரிய உந்துதலாக அமைந்தது. இன்றளவிலும், மாநில சுயாட்சியில் இதன் தாக்கம் உணரப்படுகிறது.

உதாரணமாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் சுப்பையா சண்முகம் என்ற நபரை நியமித்ததிற்கு ஸ்டாலின் தனது கண்டன அறிக்கையில், ” தமிழர் பண்பாட்டு அடையாளமாம் கண்ணகி நீதி கேட்ட மூதூர் மதுரை மாநகரத்தையே அதிர்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

பல்வேறு அரசியல் கட்டங்களில் தமிழன்னை பல்வேறு விதமாக உருவகப்படுத்தப்பட்டது. உதரணாமாக, தனித்தமிழ் இயக்கத்தின் போது, நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமாக தமிழன்னை உருவகப்படுத்தப்பட்டார். திமுகவின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் போது, கணவனால் கைவிடப்பட்ட கை பெண்ணாகவும், கயவர்களிடம் இருந்து தனது கற்பை காக்கும் இளம் பெண்ணாகவும் தமிழன்னை உருவகப்படுத்தப்பட்டார் ( பராசக்தி திரைப்படம்).  1980- 90 களுக்குப் பிந்தைய திராவிட அரசியலில் தாராள மயக் கொள்கைகள், உலகமாயமாதல் போன்றவைகளால் பாதிக்கப்பட்ட பெண்ணாக தமிழன்னை சித்தரிக்கப்பட்டார்.

அம்மன் படங்களும், இத்தகைய அரசியல் நிலைகளைத்  தான் முன்வைகின்றன. அம்மன் படங்களில் பெரும்பாலும் பக்தை (கதாநாயகி) தமிழன்னையாகவே சித்தரிக்கப்பட்டதாக லிசா ப்ளேக் தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

அம்மன் படத்திற்குள் திராவிட அரசியல்: 

பொதுவாக, அம்மன் படங்களில் கிராமத்தில் வாழும் பக்தை, திருமணத்திற்குப் பிறகு நகரத்தில் குடிபெயருவாள். நகர்புற மேல்தட்டு கலாச்சார வாழ்க்கையால் பக்தையின் மானம், மரியாதை, கற்பு கேள்விக்குறியாக்கப்படும்.(பெரும்பாலும், கணவன் காதாபாத்திரம் நகர்புற வாழ்க்கையை பிரதிநித்துவத்துவம் செய்யும்). அதை, மீட்டெடுக்க அம்மன் நகர்புறத்தை நோக்கி பயணிக்கும். பக்தைக்கும், அம்மனுக்கும் இடையே இருக்கும் நெருக்கமான உறவின் காரணமாக, தீய செயல்களில் ஈடுபட்ட கணவனை அம்மன் இறுதியாக மன்னித்து விடும். இறுதியில், பக்தியின் பூவும், பொட்டும் நிலைத்திருக்கும்.

சுருங்க சொன்னால், பக்தையின் சுமங்கலி பாக்கியாத்தை பறிக்கும் உரிமை அம்மனுக்குக் கூட கிடையாது.

கோட்டை மாரியம்மன் திரைப்படத்தில் பக்தை தனது கணவனை மன்னிக்க வேண்டுகிறார்.

 

ராஜகாளி அம்மன் திரைப்படத்தில் பக்தை தனது கணவனை மன்னிக்க வேண்டுகிறார்.

 

திராவிட அரசியலுக்குள் அம்மன்:

1957 வருட தேர்தலுக்குப் பிறகு, நடைபெற்ற அனைத்து  சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுக, அதிமுக என்ற இரண்டு பெரியத் திராவிட கட்சிகள் ஒட்டுமொத்த வாங்கு வங்கியில் 60- 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், திராவிடக் கட்சிகள் முன்வைக்கும் நலத்திட்டங்கள்.

திமுக, அதிமுகவின் நலத்திட்டங்கள் பெரும்பாலும்  அம்மன் படங்களில் காட்டப்படும் அந்த பக்தையின் கதாபாத்திரத்தை மனதில் வைத்து தான் தீட்டப்படுகிறது.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், விதவைகள்/ கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உதவித் தொகை திட்டம், இலவச கலர் டிவி, மது விலக்கு, கிரைண்டர், மிக்சி, மின் விசிறி, கல்விக் கடன் தள்ளுபடி போன்ற அனைத்து நலத்திட்டங்களும் இதற்கு சான்றாக உள்ளது.  இத்தகைய நலத்திட்டங்கள், திருமணத்திற்குப் பிறகு நகர்புறத்துக்கு புலம் பெயரும் கிராமத்து பெண்களை பேணிக் காக்க முயல்கிறது.

சுருங்க சொன்னால் தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அம்மனாக தங்களை உருவகப்படுத்திக் கொள்கின்றன.

முடிவுரை: 

திராவிடக் கட்சிகள் இந்துகளுக்கு எதிரான கட்சி என்ற வாதத்தை நாம் அவ்வப்போது கேட்டு வருகிறோம். ஆனால், உண்மை மிகவும் சிக்கலானது. பெரியாரின் திராவிட கழகம் பிராமணிய இந்துத்துவா எதிர்ப்பு வாதத்தை முன்வைத்தாலும், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு எதிரான ஒரு வாதத்தை தான் முதன்மைப்படுத்துகின்றன.

பராசக்தி படத்தில்…. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவனின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக… என்ற வசனத்தின் மூலம் திமுக தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியது. மேலும், அனைத்திந்திய ( தனித்தமிழ்நாடு முழுவதுமாக கைவிடப்பட்டதை குறிக்கிறது) அதிமுக கட்சி உருவான பின்பு, பிராமணிய எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு தமிழகத்தில் சுத்தமாக கைவிடப்பட்டன.

திமுக, அதிமுக அரசியல் பொதுக் கூட்டங்களில் உள்ள மேடை அலங்காரம், செம்மொழி பேச்சு, கவிதை நடை சுவரொட்டி, ஒலி/ஒழி அமைப்பு, தமிழ்த் தாய் வாழ்த்து, வணக்கவுரை, வாழவைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே, என் இனியத் தமிழ் மக்களே போன்ற வசனங்கள் எல்லாம் ஒரு விதமான பக்தியை உருவாக்கின. அரசியல் மாநாடுகளும், பொதுக் கூட்டங்களும் கிட்டத்தட்ட கோவில் தளங்களாக மொழிபெயர்க்கப்பட்டன.

அதிமுக மாநாடு

 

திமுக மாநாடு

மறுபுறம், அம்மன் படங்கள் பெண்ணியம், மேல்தட்டு அடக்குமுறை, வரதட்சனை கொடுமை, கிராமம்/நகரம் இடைவெளி போன்ற ஆழ்ந்த அரசியல் நிகழ்வுகளை பேசுகின்றது.

உதரணாமாக, கோட்டை மாரியம்மன் திரைப்படத்தில் 41வது நிமிடத்தில் வரும் காட்சி:

 

 

அம்மன் (ரோஜா ): அப்படி என்ன தான் எழுதுறா?
பக்தை (ரோஜா ) : slate- ல் தான் எழுதியதை கான்பிக்கின்றார்(அதில், திமுக துணை ) என்று எழுதப்பட்டுள்ளது.
அம்மன்: இது என்ன கட்சி பெயரா?
பக்தை: இல்லை. கடவுள் பெயர் . திருமயிலை முன்டக கன்னி துணை
அம்மன்: அப்டியா… முன்னால ஒரு ‘அ’ வையும் சேத்துக்கோ … அதிமுக னா…. அருள்மிகு திருமயிலை முண்டக கண்ணி துணை
பக்தை: ஆத்தா … உனக்கு இருக்கும் அறிவுக்கு நீ லண்டன்ல இருக்க வேண்டிய ஆளு….

தமிழகத்தில் அரசியலும், தெய்வங்களும் ஒன்றுடன் ஒன்று இணக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. பெயர்சொல்லப்படாத ஒரு ஆன்மீக அரசியல் தமிழகத்தில் ஏற்கனவே காலூன்றி நிற்கிறது. தெற்கு ஆசியாவில், தற்போது பெரும்பான்மை வாதத்தை பின்னுக்குத் தள்ளி அரசியல் ஜனநாயகத்தை நிலை நிறுத்தியதில் திராவிடக் கட்சிகளின் பங்கு அளப்பறியாதது.