தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையும் பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
இன்று காலை தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அதனை அடுத்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 25ஆம் தேதி தமிழக கடற்கரை நோக்கி வரக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு (நவம்பர் 21, 22) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 23: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 24: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய அதி கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவம்பர் 25: நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை வானிலை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை : வங்கக் கடல் பகுதி
மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாக மாநில அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நேற்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழையால் பாதிக்கப்படுவோரை தங்க வைக்க சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் தயாராக உள்ளது என்றார்.