மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மாநில சட்டப் பேரவையில் “லவ் ஜிஹாத்” மசோதா விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் லவ் ஜிஹாத் சட்டத்தை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை கூறினார். மேலும், இந்த குற்றச்சாட்டு நடவடிக்கை எடுக்கத் தக்க குற்றச்சாட்டு பிணை இல்லாதது என்று நரோட்டம் மிஸ்ரா கூறினார்.
“பலவந்தமாக திருமணம் செய்தல், திருமணத்தின் முலம் மோசடி செய்தல் அல்லது ஒருவரைத் மோசடி மூலம் திருமணத்திற்கு தூண்டுதல், மத மாற்றத்திற்காக திருமணம் செய்தல் ஆகியவை சட்டப்படி செல்லாது அறிவிக்க இந்த சட்டம் இருக்கும். இந்த குற்றத்தைச் செய்ய உதவுவோர் குற்றத்தின் ஒரு தரப்பாகக் கருதப்படுவார்கள்”என்று மிஸ்ரா கூறினார்.
இந்த மசோதாவின் பிற விதிகள், வேறுவேறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே நடைபெறும் திருமணத்தை நடத்துவதற்கு முன் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தெரிவிக்க வேண்டும்.
ம.பி முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் முன்னர் “லவ் ஜிஹாத்” க்கு எதிராக ஒரு புதிய சட்டத்தை கொண்டுவருவது குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார். இது இருவேறு மதங்களுக்கு இடையே நடைபெறும் திருமணத்தை எதிர்க்கும் வலதுசாரி அமைப்புகளால் உருவாக்கப்பட்டது. இருப்பினும், ஒருவருடைய விருப்பப்படி ஒருவரை திருமணம் செய்வதற்கான உரிமையை அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் உறுதி செய்து உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
“மாநிலத்தில் எந்த வகையிலும் லவ் ஜிஹாத் பெயரில் ஜிஹாத் அனுமதிக்கப்படாது. லவ் ஜிஹாத்துக்கு எதிராக தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று அவர் கூறினார்.
ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள பாஜக அரசாங்கங்களும் ‘லவ் ஜிஹாத்’க்கு எதிரான சட்ட விதிகளை பரிசீலித்து வருகின்றன.
ஹரியானாவின் பல்லப்கர் நகரில் கல்லூரிக்கு வெளியே 21 வயது மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் இந்த பிரச்சினை மீண்டும் உயிர்பெற்றது. பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டப்பட்டவரை மாதம் மாறி திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டினர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், எந்தவொரு மத்திய நிறுவனங்களாலும் ‘லவ் ஜிஹாத்’ தொடர்பான வழக்குகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், தற்போதுள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் இந்த சொல் வரையறுக்கப்படவில்லை என்றும் அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தது. அரசியலமைப்பின் 25வது பிரிவு பொது ஒழுங்கு, நீதிநெறி, சுகாதாரத்திற்கு உட்பட்டு மதத்தை வெளிப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும், பிரச்சாரம் செய்யவும் சுதந்திரம் அளிக்கிறது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்தார். இந்த கருத்தை கேரள உயர் நீதிமன்றம் உட்பட பல்வேறு நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளன.
‘லவ் ஜிஹாத்’ என்ற சொல் தற்போதுள்ள சட்டங்களின் கீழ் வரையறுக்கப்படவில்லை. ‘லவ் ஜிஹாத்’ தொடர்பான எந்தவொரு வழக்குக்கும் எந்தவொரு மத்திய நிறுவனமும் புகாரளிக்கவில்லை என்று அவர் எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதிலளித்தார்.
இருப்பினும், கேரளாவிலிருந்து இருவேறு மதத்தவர்களுக்கு இடையிலான திருமணம் சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
கேரள பெண் ஹதியா திருமணத்திற்கு முன்பு தனது கணவரால் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டாரா என்று விசாரிக்க என்ஐஏ கேட்டுக்கொள்ளப்பட்டது. 2018ம் ஆண்டில், ஹதியாவுக்கும் அவரது கணவர் ஷெஃபின் ஜஹானுக்கும் இடையிலான திருமணத்தை ரத்து செய்த விசாரணை நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.