அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. தற்போது அதிபராக உள்ள டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பிலும், ஜோ பிடன் ஜனநாயகக் கட்சி சார்பிலும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்கா அதிபர் தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?
இந்தியாவும், அமெரிக்காவும் துடிப்பான ஜனநாயக நாடுகளில் ஒன்றாகும். இந்தியாவில் மக்களவை உறுப்பினர்களுக்கு பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், அதிக இடங்கள் வெல்லும் கட்சியில் இருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்.வ எனவே, இந்தியாவில் பிரதமர் பதவிக்காக தேர்தல் நடைபெறுவதில்லை. மக்களவைக்கான தேர்தல் மட்டுமே நடைபெறுகிறது . பெரும்பான்மை கொண்ட மக்களவை உறுப்பினர்கள் பிரதமரை தேர்வு செய்கின்றனர். பிரதமர், பாராளுமன்றத்துக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார். ஒரு பார்வையில் பார்த்தால், இந்தியா அரசியலமைப்பில் பிரதமர் நாட்டு மக்களைவிட பாராளுமன்றத்துக்கே பதில் சொல் கடமை பட்டவராய் விளங்குகிறார்.
அமெரிக்காவில் குடியரசு / துணை குடியரசுத் தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காகத் தான் தேர்தல் நடைபெறுகிறது. இருப்பினும், Electoral College என்று சொல்லக் கூடிய தேர்வுக்குழு உறுப்பினர்களை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்கின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் குடியரசுத் தலைவரையும் துணை குடியரசுத் தலைவரையும் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
அமெரிக்காவில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அரசியலைப்பு விவரிக்கிறது. இருப்பினும் இவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை மாநில சட்டமன்றங்களே தீர்மானிக்கின்றன.
தற்போதைய, அதிபர் தேர்தலில், அமெரிக்கா மாநிலங்களில் உள்ள 538 தேர்வுக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுய்கின்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தலைநகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வுக்குழு உறுப்பினர்கள் டிசம்பரில் இரண்டாவது புதன்கிழமைக்கு அடுத்த திங்கட்கிழமையில் கூடி குடியரசுத் தலைவருக்கும் துணை குடியரசுத் தலைவருக்கும் தனித்தனியே வாக்களித்து தீர்மானிக்கின்றனர். அமெரிக்க அரசியலமைப்பின்படி தேர்வுக்குழு உறுப்பினர்கள், அப்போது யாருக்கும் வாக்களிக்கலாம் என்றபோதும், அநேக மாநிலங்களில் தேர்தலில் தாங்கள் உறுதியளித்த வேட்பாளருக்கன்றி துரோகம் இழைக்கும் வாக்காளர்களை தண்டிப்பதற்கான சட்டங்களை கொண்டுள்ளன.