ஆபாசத்தை பரப்பும் வகையிலான விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்கால தடை விதிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்த்தைச் சேர்ந்த சகதேவராஜா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த நீதிமன்றம், “கருத்தடை சாதனங்கள், பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவங்கள் உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான ஆபாச விளம்பரங்களுக்கு இடைக்கால தடை” என்று தெரிவித்தது.
“ இத்தகைய விளம்பரங்களில் பெண்கள் ஒரு பொருளாக சித்தரிக்கப்படுகின்றனர். விளம்பரக் காட்சிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். தொலைக்காட்சி விளம்பரங்களுக்கான தணிக்கை குழு அமைக்கப்படும் வரை, இத்தகைய விழாமபரங்களை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்,”என்று மனுவில் குறிப்பிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த என்.குருபகரன், பி புகலேந்தி அடங்கிய நீதிபதிகள் அமர்வு,” ஆபாசத்தை பரப்பும் வகையிலான விளம்பரங்களுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், தமிழக செய்தி, திரைப்பட தொழில்நுட்ப மற்றும் திரைப்பட சட்டத்துறை செயலர் பதிலளிக்கவும் உத்தரவிட்டது”.