ஞாயிறு, 8 நவம்பர், 2020

ட்ரம்ப்பை வீழ்த்திய ஜோ பைடன்!

 America Election 2020 Result Tamil News: இந்த நூற்றாண்டின் மிக முக்கிய நாள்களில் ஒன்றாக மாறியது நவம்பர் 7-ம் தேதி. முன்பு எப்போதுமில்லாத அதிக பதற்றமும் எதிர்பார்ப்புகளும் கொண்டிருந்த இந்த ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஜனநாயகக் கட்சியின் ஜோசப் ராபினெட் பைடன் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சியில் பொதுமக்கள் பலர் அதிருப்தியில் இருந்தனர். ட்ரம்ப்பின் அலட்சியத்தால் சுமார் 230,000 பேர் கோவிட்-19 நோய்க்கு பலியாகினர் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன. இதுபோன்ற அலட்சிய மற்றும் சுயநல ஆட்சியை எதிர்த்து ஆன்மா இல்லாத அமெரிக்காவிற்கு உயிர் கொடுக்கும் நோக்கத்தோடு ட்ரம்ப்பிற்கு எதிராகக் களமிறங்கினார் ஜோ பைடன். பதற்றமான தேர்தல் களம், நகம் கடிக்க வைத்த நான்கு நாள்களைத் தொடர்ந்து தனது சொந்த மாநிலமான பென்சில்வேனியாவில் வெற்றி வாகைச் சூடியிருக்கிறார் ஜோ பைடன். பெரும்பான்மைக்குத் தேவையான 284 பிரதிநிதி வாக்குகள் அவருக்குக் கிடைத்தன.

25 ஆண்டுகளுக்கும் மேலாக மறுதேர்தலில் தோல்வியடைந்த முதல் ஜனாதிபதியாக ட்ரம்ப்பைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. “அமெரிக்க மக்கள் என் மீதும், துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட (கமலா) ஹாரிஸ் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். முன்பு எப்போதுமில்லாத அளவிற்குப் பல தடைகளை எதிர்கொண்டு, அதிகமான அமெரிக்கர்கள் இம்முறை வாக்களித்துள்ளனர். அமெரிக்காவின் இதயத்தில் ஜனநாயகம் ஆழமாகத் துடித்துக்கொண்டிருந்தது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. அமெரிக்கா ஒன்றிணைவதற்கான நேரம் இது. நாம் ஒன்றிணைந்தால் நம்மால் செய்ய முடியாதது எதுவுமில்லை” என்று தன் அறிக்கையில் கூறியிருக்கிறார் பைடன்.

ஜோ பைடனைப் போன்று, கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன. வரலாற்றிலேயே முதல் கறுப்பினப் பெண்ணாகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராகவும் கமலா ஹாரிஸ் அமெரிக்கத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். “இந்தத் தேர்தல் ஜோ பைடன் அல்லது என்னை விடவும் பேசுவதற்கு அதிகம் உள்ளது. இது அமெரிக்காவின் ஆன்மா மற்றும் அதற்காகப் போராட எங்களுடைய விருப்பம் பற்றியது. செய்யவேண்டிய வேலைகள் நமக்கு நிறைய உள்ளன. தொடங்குவோம்” என்று கமலா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மறுபுறம் பைடனின் இந்த வெற்றியை டிரம்ப்பால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தேர்தல் முடிந்த நாள் முதலே, வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பல வழக்குகளைத் தாக்கல் செய்த ட்ரம்ப் அதனை ட்விட்டரில் பதிவு செய்யவும் தவறவில்லை. “நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன்!” உள்ளிட்ட டீவீட்களை தானே பதிவிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இருப்பினும், வெள்ளை மாளிகையில் செனட்டராகவும் பின்னர் துணை ஜனாதிபதியாகவும் வாஷிங்டனில் நான்கு தசாப்தங்களாக இருந்து, 74 மில்லியனுக்கும் அதிகமான, டிரம்ப்பை விட 4 மில்லியன் அதிக குறிப்பாக இதற்கு முன் வேறு எந்த ஜனாதிபதி வேட்பாளரையும் விடவும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார் பைடன்.