சனி, 7 நவம்பர், 2020

ஆந்திராவில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 262 மாணவர்கள், 160 ஆசிரியர்களுக்கு கொரோனா

 கொரோனா பொது முடக்கத்திற்குப் பள்ளிகள் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், ஆந்திராவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாட்களில் 262 மாணவர்களுக்கும் 160 ஆசிரியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஆந்திர பள்ளி கல்வி ஆணையர் சின்னா வீரபத்ருடு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக, இந்தியா முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பின் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் படிப்படியாக பொதுமுடக்கத் தளர்வுகளை அறிவித்தன. அதன்படி, மத்திய அரசு அண்மையில் நாட்டில் பள்ளிக் கல்லூரிகளைத் திறக்க பரிந்துரை செய்தது. மேலும், பள்ளிக் கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேச மாநில அரசு அம்மாநிலத்தில், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நவம்பர் 2ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்தது.

அதன்படி, ஆந்திராவில், 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 2 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து, கடந்த 3 நாட்களில் 262 மாணவர்களுக்கும் சுமார் 160 ஆசிரியர்களுக்கும் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில பள்ளி கல்வி துறையின் மூத்த அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஆந்திர மாநில பள்ளிக் கல்வி ஆணையர் வி.சின்ன வீரபத்ருடு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை ஆபத்தானது அல்ல என்று கூறினார்.

ஒவ்வொரு பள்ளியிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டாலும், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை ஆபத்தானது அல்ல என்று பள்ளி கல்வி ஆணையர் வி.சின்ன வீரபத்ருது தெரிவித்தார்.

இது குறித்து வீரபர்ருடு பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “ஆந்திராவில் நேற்று (நவம்பர் 4) சுமார் 4 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் பயின்றனர். பரிசோதனையில் 262 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் இது 0.1 சதவீதம் கூட இல்லை. பள்ளிகளுக்கு அவர்கள் வருவதால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சொல்வது சரியானதல்ல. ஒவ்வொரு பள்ளி வகுப்றைகளையும் நாங்கள் பாதுகாப்பாக உறுதி செய்கிறோம். ஒரு வகுப்பறையில் 15 அல்லது 16 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். இது ஆபத்தானது இல்லை.” என்று கூறினார்.

ஆந்திர மாநில பள்ளிக் கல்வித்துறை அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, அம்மாநிலத்தில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் 9.75 லட்சம் மாணவர்கள் படிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 3.93 லட்சம் பேர் பள்ளிக்கு வந்துள்ளனர். 1.11 லட்சம் ஆசிரியர்களில் 99,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதன்கிழமை கல்வி பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.

அந்திராவில் உள்ள 1.11 லட்சம் பள்ளி ஆசிரியர்களில், சுமார் 160 ஆசிரியர்களுக்கு மட்டுமே பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரின் உயிரும் எங்களுக்கு முக்கியம்” என்று வீரபத்ருடு கூறினார்.

அரசாங்கத்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், கொரோனா வைரஸ் தொற்று பற்றிய அச்சம் பெற்றோர்கள் மத்தியில் நிலவுவதால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை சுமார் 40 சதவீதம் மட்டுமே உள்ளது என்று கூறினார்.

பள்ளிகள் திறக்கப்படாவிட்டால் ஆன்லைன் வகுப்புகளை பெற முடியாத ஏழை மாணவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், பழங்குடியினர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண் மாணவர்களுக்கு இது மிகவும் சிக்கலானது என்றும் பதின்வயதினர் பள்ளிகளுக்கு செல்வதை நிறுத்தினால் பெற்றோர்கள் குழந்தை திருமணங்களில் ஈடுபடக்கூடும் என்றும் வீரபத்ருடு கூறினார்.