Unease in CPM over ordinance BJP and Congress call it bid to gag free speech : சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் எழுதப்படும் பதிவுகளுக்கு சிறை தண்டனை என்ற சட்டதிருத்தத்தை மேற்கொண்ட கேரள அரசிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர் குரல்கள் கிளம்பியுள்ளன. கேரள முதல்வர் இந்த சட்டம் எந்த வகையிலும் கருத்து சுதந்திரத்தையோ அல்லது ஊடகத்தினையோ பாதிக்காது என்று கூறினார். இந்த சட்டதிருத்தம் ஊடகத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட கடுமையான ஒன்றாகும் என்று சி.பி.எம். கட்சியால் ஆளப்படும் எல்.டி.எஃப். அரசை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர்.
கட்சியின் மத்திய தலைமையின் தலையீடுக்குப் பிறகு விஜயன் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். . “கணிசமான சீற்றம் உள்ளது … அத்தகைய கட்டளையை பாதுகாப்பது கடினம்” என்று ஒரு பொலிட்பீரோ உறுப்பினர் கூறினார். கேரள எல்.டி.எஃப். அரசின் ஒரு அங்கமாக இருக்கும் சி.பி.ஐ கட்சியும் இதனால் வருத்தம் அடைந்துள்ளது. கூட்டணி கட்சியின் நம்பிக்கையை பெற்ற பிறகு முதல்வர் இதனை அறிவித்திருக்கலாம் என்று கூறிய அக்கட்சியினர் அடுத்த கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தின் போது இது குறித்து பேசப்படும் என்று கூறினர்.
சி.பி.ஐ பொது செயலாளர் டி. ராஜா இது குறித்து பேசிய போது, அவருடைய கட்சி இது போன்ற விவகாரங்களில் அரசு திருத்தம் மேற்கொள்வதை எதிர்க்கிறது என்று கூறினார். “அனைத்து ஆட்சேபனைகள் மற்றும் அச்சங்கள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே எல்.டி.எஃப் அரசாங்கம் பொதுமக்களின் கருத்தை பரிசீலிக்கும் என்றும், அதற்கேற்ப பொருத்தமான மட்டத்தில் பிரச்சினையை தீர்க்கும் என்றும் எங்கள் கட்சி நம்புகிறது. நாங்கள் இந்த விஷயத்தை தகுந்த மட்டத்தில் எடுத்துக்கொள்வோம்” என்றார் ராஜா.
அவர்களை விமர்சிக்கும் அனைவரையும் அமைதியாக்குகிறார்கள் என்று கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா விமர்சனத்தை முன் வைத்தார். அதே போன்று கேரள பாஜக தலைவர், இந்த திருத்தம் அனைத்து அரசியல் போராட்டங்களையும் அமைதியாக்கும் நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம், “இந்த சட்டத்தால்அதிர்ச்சியடைந்ததாக” ட்வீட் செய்துள்ளார். சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இந்த “கொடூரமான” முடிவை எவ்வாறு ஆதரிப்பார் என்றும் கேள்வி எழுப்பினார்.
அத்தகைய அச்சங்கள் ஆதாரமற்றது என்று முதல்வர் கூறியுள்ளார். இந்தத் திருத்தத்தின் கீழ் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு முன், சட்டத்தை எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து எஸ்ஓபி (Standard Operating Procedure) தயாரிக்கப்படும் என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.
கேரள போலீஸ் சட்டத்தில் 118 (ஏ) என்ற புதிய பிரிவை உள்ளடக்கிய 2020 கேரள காவல்துறை (திருத்த) சட்டத்திற்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். அதன்படி, எந்தவொரு தகவல்தொடர்பு மூலமாகவும், எந்தவொரு நபரையும் புண்படுத்தும் அல்லது அச்சுறுத்தும் நோக்கத்தோடு தகவல்களை உருவாக்கினால் அல்லது அனுப்பினால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ .10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுவார்.
இந்தத் திருத்தம் தனிநபர்களைக் குறிவைத்து சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதை சரி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் கூறியுள்ள நிலையில், எதிர்க்கட்சி இது “பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது” என்றும் “அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகவும் உள்ளது என்று குற்றம் சுமத்தியுள்ளது.
“பத்திரிகை சுதந்திரத்தின் பெயரில், தனிப்பட்ட சுதந்திரத்தை மீற முடியாது. இதேபோல், தனிப்பட்ட சுதந்திரம் என்ற பெயரில், பத்திரிகை சுதந்திரத்தை மீற முடியாது. இரண்டையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது. இந்தச் சூழலில்தான், சர்வதேச மட்டத்தில் கூட தனிப்பட்டவர்களின் கவுரவத்தை மீறுவதற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கேரள போலீஸ் சட்டத்தில் திருத்தம் என்பது அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஏற்ப மட்டுமே உள்ளது என்று விஜயன் தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துதல், குறிப்பாக சில ஆன்லைன் சேனல்கள் “பத்திரிகை போர்வையில்” செயல்படுதல் தொடர்பாக முக்கியமான நபர்கள் உட்பட பலரிடம் இருந்தும் புகார்களை மாநில அரசு பெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மேற்கோள் காட்டிய அவர், இதன் மூலமாக பல்வேறு துயர சம்பவங்கள் அரங்கேறியுள்ளது என்றும் கூறினார். இந்த திருத்தம் தொடர்பான அனைத்து ஆக்கப்பூர்வமான கருத்துகளையும் பரிந்துரைகளையும் அரசு நிச்சயமாக பரிசீலிக்கும் என்று அவர் கூறினார்.
புதிய பிரிவு ஊடகங்களை அமைதியாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. சி.பி.எம். மற்றும் அதன் அரசு அவர்களை விமர்சனம் செய்பவர்களை அமைதியாக்க இந்த சட்டத்தை கொண்டு வருகிறது. ஊழல் மற்றும் அரசாங்கத்தில் இருக்கும் வாரிசு அரசனை சுட்டிக்காட்டும் ஊடகத்தை அமைதியாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சி.பி.எம்-க்கு எதிராக பேசும் நபர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள் என்ற செய்தியை அனைவருக்கும் தருகிறது என்றூ சென்னிதலா கூறியுள்ளார். கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கடுமையான கொடுங்கோல் சட்டத்தை முதலர் கொண்டு வந்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை அமைதியாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் சுரேந்திரன் கூறியுள்ளார். அறிவிக்கப்படாத அவசரகாலத்தையே இது காட்டுகிறது. இந்த புதிய சட்டம் மக்களின் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் உரிமைக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. மீடியாவை மட்டும் அல்லாமல் பொது மக்களையும் அமைதியாக்க இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார் முதல்வர் என்றும் அவர் கூறினார்.
2015 ஆம் ஆண்டில், ஐ.டி சட்டத்தின் பிரிவு 66 ஏ போன்றே கேரள போலீஸ் சட்டமும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை மீறுவதாகவும், தெளிவற்ற தன்மை கொண்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.
பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் இந்த சட்டத்திருத்ததை தற்போது அமல்படுத்த முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார் பினராயி விஜயன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எல்.டி.எஃப். கூட்டணி மீது நம்பிக்கை வைத்தவர்கள், ஜனநாயகத்தின் பாதுகாப்பு மீது நம்பிக்கை வைத்தவர்களின் கருத்துகளை கவனத்தில் கொண்டு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் சட்டமன்றத்தில் இது தொடர்பாக எம்.எல்.ஏக்களிடம் கருத்துகள் கேட்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.