chembarambakkam tamil news nivar cyclone : சென்னைக்கு குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதியம் 12 மணிக்கு 1000 கனஅடி திறக்கப்பட உள்ளது. ஏரி முழு கொள்ளவை எட்டிய உடன் ஏரிக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில் சென்னை மற்றும் புறநகரில் பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது. நீர்மட்டம் 22 அடியை எட்டுவதால் முன்னெச்சரிக்கையாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும். செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழுதியம்பேடு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆற்றில் நீர் வரும். அப்படியே அது கடலில் கலக்கும். இந்த ஏரியில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேறியதால் கடந்த 2015ல் வெள்ளம் ஏற்பட்டதால் மக்களிடையே அச்சம் நிலவுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.