வியாழன், 5 நவம்பர், 2020

டெல்லியில் கொரோனா வைரஸின் 3 ஆம் அலை வீசுகிறது: அரவிந்த் கெஜிரிவால்!

 டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு கொரோனா வைரஸின் மூன்றாம் அலை வீசி வருவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் தெரிவித்துள்ளார். 


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தலைநகர் டெல்லியும் இருந்து வருகிறது. ஆரம்ப காலத்தில் அங்கு அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு அம்மாநில அரசு மேற்கொண்ட துரித நோய்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அங்கு வைரஸ் பாதிப்பு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த சில தினங்களாக டெல்லியில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது குறிப்பாக டெல்லியில் நேற்று ஒரே நாளில் 6,750 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால், கடந்த சில நாட்களாக டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை  கொரோனா வைரஸின் மூன்றாவது அலை என குறிப்பிடலாம். இது தொடர்பாக நாளை ஆய்வு கூட்டங்களை நடத்தவுள்ளோம். எந்தவொரு அவசர காலத்திலும் மருத்துவமனை படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் திருவிழா காலங்களில் நகரத்தில் பட்டாசுகளைப் பயன்படுத்துவது குறித்த முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 


இதுவரை டெல்லியில் 3,96,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 6604 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.