Nivar Cyclone: அதி தீவிர புயலான ‘நிவர்’ நவம்பர் 25 இரவு 11.30 மணி முதல் நவம்பர் 26 அதிகாலை 2.30 மணி வரை 120-130 கிமீ வேகத்தில் கரையைக் கடந்தது. இதனால் வட கடலோர மற்றும் உள் தமிழகம் முழுவதும் கடுமையான காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்த நிவர் புயல், வடமேற்கு நோக்கி நகர்ந்து மூன்று மணி நேரத்திற்குள் வலுவிழக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். புயல் கரையைக் கடந்த நேரத்தில் கடலூர், காரைக்கல், புதுச்சேரி, நாகப்பட்டினம் மற்றும் சென்னையின் சில பகுதிகளில் மிகவும் கனமான மழையும், சில நேரங்களில் அதி தீவிர மழையும் பெய்தது.
மரக்காணம் அருகே கரையைக் கடந்தது நிவர் புயல்: மழை தொடரும் என அறிவிப்பு
பல மாவட்டங்களின் சாலைகளை துண்டிக்கும் வகையில் பல மரங்கள் விழுந்தன. கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் அடித்துச் செல்லப்பட்டன. 2015 சென்னை பெருவெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட முடிச்சூர், நிவர் புயலால் இடுப்பு அளவிற்கு தண்ணீரில் மீண்டும் மூழ்கியது.
நிவர் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதும், அதிகாலை 2.30 மணியளவில் பலவீனமடைந்து வடக்கு-வடமேற்கு நோக்கி சென்றது. புயல் கடந்து வந்த பகுதிகளில் தொடர்ந்து காற்று வீசுவதோடு, மேகமூட்டமான வானிலையும் காணப்படுகின்றன. நவம்பர் 25 காலை 8.30 மணி முதல் நவம்பர் 26 அதிகாலை 2.30 மணி வரை நிவர் புயலால், நாகப்பட்டினத்தில் 63 மி.மீ, காரைக்காலில் 86 மி.மீ, கடலூரில் 246 மி.மீ, புதுச்சேரியில் 237 மி.மீ, சென்னையில் 89 மி.மீ. அளவில் மழை பெய்துள்ளது.
திருவண்ணாமலையில் மையம் கொண்டிருக்கும் நிவர்
கரையைக் கடந்த நிவர் புயல் தற்போது திருவண்ணாமலையில் மையம் கொண்டிருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். அடுத்த 6 மணி நேரம் மிக தீவிரமாக காற்று வீச வாய்ப்புள்ளது. முக்கியமாக புயல் கடந்து சென்ற பாதையில் இருக்கும் பகுதிகள் அதிகம் பாதிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
நிவர் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கனமழை பெய்தது. மரக்காணம், ஆரணி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், சென்னையிலும் பல இடங்களில் கனமழை பெய்தது. அதோடு கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை நிலவரம்
நிவர் புயலால் சென்னையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சென்னையின் தாழ்வான பகுதிகளான கிழக்கு தாம்பரம், வேளச்சேரி, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து, ஒவ்வொரு வீடும் தனித்தனி தீவாக காட்சியளித்தன. இதனால் மக்கள் வீட்டின் மேல்பகுதியில் அடைக்கலம் புகுந்தனர். பலத்த மழையால் வேளச்சேரி வெள்ளத்தில் மூழ்கியது. சாலையில் மரங்கள் விழுந்ததால், சென்னை செங்கல்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் டேங்க், நிவர் புயலின்போது பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. பலத்த மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டை, எம்ஜிஆர் நகர், வேளச்சேரி, புரசைவாக்கம், பெரம்பூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பலத்த சூறாவளி காற்றால் சென்னை மாநகரம் முழுவதும் 500 மரங்கள் விழுந்தன.
நிவர் புயல் இன்னும் 2 மணி நேரத்தில் முழுமையாக வலுவிழக்கும் எனத் தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், இதன் எதிரொலியாக சென்னையில் இன்றும் மழை தொடரும் எனத் தெரிவித்துள்ளது.