தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்டு சந்தைகளில் விற்பனை களைகட்டியது.
சேலம் மாவட்டம் வீரகனூரில் இன்று நடைபெற்ற சந்தையில், விற்பனைக்காக ஆயிரக்கணக்கான ஆடுகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஆடுகளை வாங்குவதற்காக ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், சேலம், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் இறைச்சி கடைக்காரர்களும் குவிந்ததால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இன்று ஒரே நாளில் 1 கோடி ரூபாய் வரை விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த புரிசை கிராமத்தில் நடைபெற்ற சந்தைக்கு திரும்பூண்டி, எச்சூர், பழஞ்சூர், தென் இலுப்பை, வீரம்பாக்கம் புதூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி ஆகிய இடங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்க சந்தையில் குவிந்தனர். இன்று சுமார் 20 லட்சம் ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெறும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.