வியாழன், 5 நவம்பர், 2020

பேரறிவாளன் விடுதலை விவகாரம் : ஆளுநரின் செயலால் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

   ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை பெற்று வரும் ஏழு நபர்களில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை தொடர்பாக நேற்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழக அரசு, பேரறிவாளனை விடுதலை செய்ய சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பாக 2 ஆண்டுகள் வரையிலும் முடிவு எடுக்காத காரணத்தால் உச்ச நீதிமன்றம் தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்துள்ளது.

ஆளுநர் இந்த விவகாரத்தில் முடிவை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அரசியல் அமைப்பு பிரிவு 142-ஐ பயன்படுத்தலாமா என்று பேரறிவாளன் சார்பில் ஆஜரான கோபால் சங்கரநாராயணனிடம் எல். நாகேஸ்வ்வர ராவ், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ராஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியது. அப்போது அவர், தமிழக அரசும் அதனை பரிந்துரை செய்து ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பியுள்ளது. அது குறித்தும் இன்னும் முடிவுகள் எட்டப்படவில்லை என்று கூறினார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

”நீங்கள் கூறுங்கள்… இதற்கு முந்தைய காலங்களில் ஆளுநரை முடிவுகளை மேற்கொள்ள கூறியதைப் போன்றே இப்போதும் செய்யலாமா” என்று கேள்வி எழுப்பினார்கள் நீதிபதிகள்.

இது ஆளுநரின் தனி அதிகாரம் என்று கூறிய சங்கரநாராயணன், இதற்கு முந்தைய காலங்களில் அரசியல் அமைப்பு பிரிவு 142-ன் கீழ் நீதிமன்றம் பயன்படுத்திய அதிகாரங்களையும் மேற்கோள் காட்டினார்.  அதற்கு அந்த அமர்வு, “இப்போதைய சூழலில் நாங்கள் இந்த அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில அரசின் பரிந்துரை கிடப்பில் இருப்பது மகிழ்ச்சியானதாக இல்லை” என்று கூறியது.

தமிழக அரசு சார்பில் வாதிட்ட பாலாஜி ஸ்ரீநிவாசன், இந்த வழக்கில் மிகப்பெரிய சதி இருப்பதாலும், சி.பி.ஐயின் அறிக்கைக்காக ஆளுநர் காத்திருக்கிறார் என்றும் கூறினார்.  “பெரிய சதியை கண்டுபிடிக்கும் விசாரணையானது, ராஜீவ் கொலை வழக்கில் வேறு யாரேனும் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதை அறியத்தானே தவிர, ஏற்கனவே சிறையில் இருப்பவர்கள் தொடர்பானது அல்ல. இந்த பெரிய சதியை கண்டிபிடிக்கும் விசாரணையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் பல வருடங்களாக அப்படியே இருக்கிறது” என்றும் மேற்கோள் காட்டினார்கள்.

இந்த வழக்கை வருகின்ற நவம்பர் 23ம் தேதிக்கு மாற்றிய அமர்வு, ஆளுநருக்கு நீதிமன்றம் எவ்வாறு வழிகாட்டுதல்களை வழங்க முடியும் என்று பதிலளிக்குமாறு கட்சிகளைக் கேட்டுக் கொண்டது.  இந்த வழக்கில் ஏழு குற்றவாளிகளையும் முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு செப்டம்பர் 9, 2018 அன்று ஆளுநருக்கு பரிந்துரை செய்ததாக மாநில அரசு முன்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மே 11, 1999 தீர்ப்பினை திரும்பப் பெறக் கோரி பேரறிவாளன் அளித்த மனுவை உச்ச நீதிமன்றம் முன்னதாக தள்ளுபடி செய்தது.