நிவர் புயல் கரையைக் கடக்கும்போது செங்கல்பட்டு, நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் 5 ஆண்டுகளில் வர்தா, கஜா என ஏற்கெனவே 2 புயல்களை சந்தித்துள்ள நிலையில் 3வதாக நாளை நிவர் புயலை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த நிவர் புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிவர் புயல் வலுவனாதாக இருக்கும் என்பதால் தமிழக அரசும் புதுச்சேரி அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொது மக்கள் நிவர் புயல் தற்போது எங்கே இருக்கிறது, எந்த இடத்தில் மையம் கொண்டுள்ளது? எப்போது எங்கே கரையைக் கடக்கும்? கரையைக் கடக்கும்போது என்ன வேகத்தில் காற்று வீசும் என்ற செய்திகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திகளை எதிர்பார்த்து உள்ளனர்.
இந்த நிலையில், சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், செங்கல்பட்டு, நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாள்ர்களிடம் கூறியதாவது, “நிவர் புயல் தற்போது தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 350 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 430 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. தற்போது புயல் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகரத் துவங்கியுள்ளது. அது அடுத்து வரும் 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதைத் தொடர்ந்து வருகிற 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும். இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மாமல்லபுரத்துக்கு இடையே புதுச்சேரிக்கு அருகே நாளை மாலை அதிதீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடக்கிறபொழுது அருகிலுள்ள பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். சமயங்களில் 145 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த புயல் வலுப்பெறுகின்ற காரணத்தால் நாளை கரையைக் கடக்கின்ற பகுதிகளில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் 120 முதல் 130 கி.மீ வேகத்திலும் சயமங்களில் 145 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.