வியாழன், 5 நவம்பர், 2020

6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை!

 வடகிழக்கு பருவமழை புதன்கிழமை முதல் வேகத்தை அதிகரித்து, சென்னைக்கு அதிக மழை பெய்யக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை முதல் இரவு அல்லது அதிகாலை முதல் அங்கு நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு நெருக்கமாக இருக்கும் பகுதிகளில், ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி தான் இதற்குக் காரணம் என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு நவம்பர் 4-ம் தேதி முதல் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவித்தனர். நவம்பர் 8 ஆம் தேதி வரை இந்த மழை தொடர வாய்ப்புள்ள நிலையில், சமீபத்தில் பிலிப்பைன்ஸை தாக்கிய கோனி சூறாவளியில் எஞ்சியவற்றால், அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.

மதுரை, சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஐஎம்டி-யின் கணிப்பு படி, உள்மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில், செவ்வாய்க்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை நகரத்தில் செவ்வாய்க்கிழமை வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தனியார் வானிலை பதிவரான தமிழ்நாடு வெதர்மேன் எனும் பிரதீப் ஜான், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பருவமழை பெய்யக்கூடும் என்றும், கோனியின் எச்சங்கள் மழை தாங்கும் மேகங்களுடன் வரும் போது, நவம்பர் 10-ஆம் தேதி நல்ல மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.


ஐஎம்டி-யிடம் கிடைத்த தரவுகளின்படி, கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) நவம்பர் 1-ஆம் தேதி 8 செ.மீ., திருமூர்த்தி (திருப்பூர் மாவட்டம்) 7 செ.மீ, அமராவதி அணை மற்றும் உடுமலைப்பேட்டை (திருப்பூர் மாவட்டம்), குன்னூர் (நீலகிரி) தலா 5 செ.மீ மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 4 செ.மீ மழை பெய்தது, தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில், நவம்பர் 1 ஆம் தேதி தலா 3 செ.மீ மழை பெய்தன.