ஒராண்டுக்கு பிறகு, ஜம்முவில் தனது கட்சித் தொண்டர்களிடம் முதன்முறையாக பேசிய, பரூக் அப்துல்லா உணர்ச்சி வசப்பட்ட நிலையில், மாநில மக்களின் முந்தைய அரசியலமைப்பு உரிமைகள் மீட்கப்படும் வரை நான் சாக மாட்டேன் என்று வெள்ளிக்கிழமை கூறினார்.
தேசிய மாநாட்டு கட்சி (என்.சி) தலைவர் பரூக் அப்துல்லா, பாஜக நாட்டை தவறாக வழிநடத்தியதாகவும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் லடாக்கில் உள்ளவர்களுக்கும் தவறான வாக்குறுதிகள் அளித்ததாகவும் குற்றம் சாட்டினார்.
குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியின் (பி.ஏ.ஜி.டி) கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஷெர்-இ-காஷ்மீர் பவனில் நிரம்பியிருந்த தேசிய மாநாட்டுக் கட்சி தொண்டர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா “எனது மக்களின் உரிமைகள் திருப்பித் தரப்படும் வரை நான் சாக மாட்டேன்…. மக்களுக்காக ஏதாவது செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். எனது வேலையை முடிக்கும் நாளில்தான் நான் இந்த உலகத்தை விட்டு வெளியேறுவேன்” என்று கூறினார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது பிரிவை திருத்தம் செய்த பின்னர், ஜம்முவில் 84 வயதான அப்துல்லாவின் முதல் அரசியல் கூட்டம் இதுவாகும். மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
ஜம்மு-காஷ்மீரில் பிரதான அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த, மாநிலத்தின் முந்தைய சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காகவும், உரையாடலைத் தொடங்கவும் கடந்த மாதம் இந்த பிரச்னையில் அனைத்து கட்சிகளுக்கும் இடையில் பி.ஏ.ஜி.டி கூட்டணி அமைத்தன.
பரூக் அப்துல்லா, அவரது மகனும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லாவுடன், பிற்பகல் ஷெர்-இ-காஷ்மீர் பவனுக்கு வந்தார். ஒரு ஆண்டுக்குப் பிறகு, சென்ற முதல் பயணம் இது.
அப்துல்லாக்கள், காஷ்மீரில் உள்ள மற்ற அரசியல் தலைவர்களுடன், பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இந்த ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.
ஸ்ரீநகரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, தனது கட்சி ஜம்மு, லடாக் மற்றும் காஷ்மீர் இடையே ஒருபோதும் வேறுபாடு காட்டவில்லை என்றும் அவர்களை எப்போதும் ஒரு தனித்துவமானவரகளாக கருதுவதாகவும் கூறினார்.
“ஜம்மு, லடாக் மற்றும் காஷ்மீர் ஒவ்வொன்றும் தனித்தனியாக இருப்பதாக நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. சூழ்நிலையின் அவசரத்தினால் பி.ஏ.ஜி.டி உருவாகும் நேரத்தில் இந்த பிராந்திய மக்களை எங்களால் அழைத்துச் செல்ல முடியவில்லை, இப்போது நாங்கள் இங்கே இருக்கிறோம்” என்று அப்துல்லா கூறினார்.
பிரிவு 370, பிரிவு 35 ஏ-வை மீட்டெடுப்பதற்கும், ஜம்மு-காஷ்மீரில் லகான்பூருக்கு அப்பால் நடைமுறைப்படுத்தப்பட்ட கறுப்புச் சட்டங்களை தூக்கி எறிவதற்கும் கட்சிகள் கைகோர்த்துள்ளன.