UPI பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இணைய பயன்பாடு அதிகரித்த பிறகு மக்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் பணிகளை எளிதாக முடித்துக் கொள்கின்றனர். அந்த வகையில் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் பல நிறுவனங்கள் இதனை அறிமுகம் செய்துள்ளன. இந்நிலையில் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு முதல் இதற்கான சோதனை நடைபெற்று வந்தது. இந்த சேவைக்கு NPCI அனுமதி வழங்கிய நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய வாட்ஸ்அப் அப்டேட்டில் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். முதல்கட்டமாக குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இந்த சேவை கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 பிராந்திய மொழி வாட்ஸ்அப் அப்டேட்டுகளில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை அதிகமானோர் பயன்படுத்துவதால், இந்த பணம் அனுப்பும் வசதியால் மேலும் பயனர்கள் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் கூறுகையில், ‘மெசேஜ் அனுப்புவதன் மூலம் இனி உங்கள் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் எளிதாக பணம் அனுப்ப முடியும். இதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. 140 வங்கிகள் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது. பணப் பரிமாற்றம் மிக பாதுகாப்பானதாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார். கூகுள் பே உள்ளிட்ட மற்ற செயலிகள் போலவே இதுவும் செயல்படும் என கூறப்படுகிறது.