திங்கள், 9 நவம்பர், 2020

தேசிய கல்விக்கொள்கையின் அம்சங்களை அமல்படுத்தினால் மட்டுமே நிதியுதவி!

 தேசிய கல்விக்கொள்கையின் அம்சங்களை அமல்படுத்தினால் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பரிந்துரைகள் மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ள UGC, உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் அதில் பணிபுரியும் பேராசிரியர்கள் குறித்த முழுமையான தகவல்களை வித்வான் மற்றும் இந்திய ஆராய்ச்சி தகவல் தொடர்பு அமைப்பின் ( IRINS ) இணையதளங்ளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

பேராசிரியர்கள், பணியாள்ர்கள் குறித்த விவரங்கள் UGC கட்டுப்பாட்டில் செயல்படும்   ‘இன்ப்ளிப்நெட்’ என்ற தகவல் முகமையில் சேமித்து வைக்கப்பட்டு பராமரிக்கப்படும் என்றும், இன்ப்ளிப்நெட் வலைத்தளம் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இடையே அறிவுசார்ந்த தகவல் தொடர்புகளை மேம்படுத்த வழிவகை செய்யும் என்றும் UGC தெரிவித்துள்ளது.

வித்வான், IRINS இணையதளங்களில் பதிவு செய்யும் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பேராசிரியர்கள் மட்டுமே UGC மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தால் வழங்கப்படும் நிதியுதவியைப் பெற முடியும் என்றும், இதை கருத்தில் கொண்டு உயர் கல்வி நிறுவனங்களும், பேராசிரியர்களும் வித்வான், IRINS இணையதளத்தில் தங்கள் தகவல்களை விரைவாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் UGC செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த 2 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்களை அமல்படுத்த UGC தொடர்ச்சியாக உத்தரவிட்டு வருவது பல்கலைக்கழகங்கள், கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.