புதன், 11 நவம்பர், 2020

அனுமதி பெறாமல் வேல் யாத்திரை நடத்தியது ஏன்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

 அனுமதி வழங்கப்படாத நிலையில், வேல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்? என்று சென்னை நீதிமன்றம் பாஜக தரப்பு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பியது.

முன்னதாக, தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனுவில், “பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட பின், நவம்பர் 16-ம் தேதிக்குப் பின் மத நிகழ்ச்சிகளுக்காக நூறு பேர் வரை கூடலாம் என அரசாணையாகத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

ஆனால், அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பின் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வழிகாட்டு விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தி, மத்திய அரசு அனுமதித்துள்ளது. கடந்த அக்டோபர் 30ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையைச் செல்லாது என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும். நவம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்க உள்ள வேல் யாத்திரையில் தலையிடக் கூடாது எனத் தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும்.

அமைச்சர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீறி, தமிழக அரசு இந்த அரசாணையைப் பிறப்பித்துள்ளது. வேல் யாத்திரை சுமுகமாகச் செல்ல ஏதுவாக அனைத்து மாவட்டக் காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்தார்.

கடந்த 6ம் தேதி, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்து வந்தது. வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி காவல்துறையிடம் அளித்த மனுவில் எந்த விபரமும் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், வழக்கை வரும் பத்தாம் (இன்று) தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் உத்தரவிட்டனர்.

ஆனால், வெற்றிவேல் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறிய தமிழக பாஜக, செப்டம்பர் 8ம் தேதியன்றே, திருவொற்றியூர் ஸ்ரீ.வடிவுடையம்மன் கோவிலில் இருந்து வெற்றிவேல் யாத்திரையை துவங்கியது. அனுமதி பெறாமல் யாத்திரை மேற்கொண்டதால்  எல்.முருகன்  உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழக காவல்துறையால்  கைது செய்யப்பட்டனர்.  நவமபர் 9ம் தேதி வெற்றிவேல் யாத்திரை 3ம் நாள் நிகழ்ச்சிகள் செங்கல்பட்டில் மேற்கொள்ளப்பட்டது. மீண்டும், காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில், மனு மீதான விசாரனை நடைபெற்றது போது, நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை பாஜக தரப்பினரிடம் முன்வைத்தனர். அனுமது வழங்கப்படாத நிலையில், வேல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். வேல் ஒரு ஆயுதம், ஆயுத சட்டப்படி அது தடை செய்யப்பட்டது எனவும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், வேல் யாத்திரையில் தமிழக அரசு தலையிடக் கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்க இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரனையை டிசமபர் 2ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

இருப்பினும், எத்தனை தடைகள் என்றாலும் அத்தனையையும் தாண்டி ஒரு மாத யாத்திரை நடைபெற்றே தீரும், திருச்செந்தூரில் திட்டமிட்டவாறு யாத்திரை முடியும், நம் வெற்றி வரலாறு அங்கிருந்து தொடங்கும் என்று மாநில பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன் நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்பு தெரிவித்தார்.